ARTICLE AD BOX
சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவு திடீரென சரிந்து லோ சுகராக இருக்கும். இவ்வாறு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக செயலிழப்புகளுக்கு ஆரம்ப கால அறிகுறிகள் என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் என மருத்துவர் அருண் கார்த்திக் அறிவுறுத்துகிறார். இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்திகரிப்பு செய்வது தான் சிறுநீரகத்தின் பிரதான பணி என பலரும் கூறுவார்கள்.
இவை தவிர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதும் சிறுநீரகத்தின் முக்கிய வேலை தான் என மருத்துவர் அருண் கார்த்திக் கூறுகிறார். இரத்தம் ஊறுவதற்கான ஹார்மோன் தயாரிப்பதும், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் ஹார்மோன் தயாரிப்பதும் கூட சிறுநீரகத்தின் வேலை தான். அதன்படி, இந்த செயல்பாடுகள் குறையும் போது சிறிநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் தோன்றலாம்.
கால்களில் வீக்கம் மற்றும் கண்களின் கீழ்ப்பகுதிகளில் வீக்கம் போன்றவை இந்த நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகள். மேலும், சிறுநீர் வெளியேறும் போது அதிகப்படியாக நுரைத்து இருக்கும். சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் போது உடலில் அதீத அசதி உணர்வு இருக்கும். இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இதேபோல், இரவு நேரத்தில் உடலில் அதிகமாக அரிப்பு உருவாகும். இரத்த அழுத்தம் சீராக இல்லாததால் தலை வலியும் உருவாகும். இதன் இறுதியாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு திடீரென சரியத் தொடங்கும். சாப்பிடக் கூடிய மருந்துகள் சிறுநீரகம் வழியாக தான் சுத்திகரிக்கப்படும். ஆனால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது அந்த மருந்துகள் வெளியேற முடியாமல் உடலில் இருக்கும்.
எனவே, உணவு முறை மாற்றங்கள் மேற்கொள்ளாமல் சர்க்கரை அளவு சரிந்தால் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் அருண் கார்த்திக் தெரிவித்துள்ளார். இவை அனைத்துமே சிறுநீரக கோளாறுக்கான ஆரம்ப கால அறிகுறிகளாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூரியா, கிரியாட்டினின், ப்ரோட்டீன் கிரியாட்டினின் ரேஷியோ, இ.ஜி.எஃப்.ஆர் ஆகிய பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் சிறுநீரக செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.