ARTICLE AD BOX
உச்சத்திலிருந்து தரையில் விழுந்த டாடா குழும பங்குகள்.. இந்த 5 பங்குகளை இப்ப வாங்கலாமா?
கடந்த 5 மாதங்களாக பங்குச் சந்தைகளின் போக்கு சரிவின் பாதையில் உள்ளது. மைக்ரோ கேப் பங்குகள் முதல் ப்ளூசிப் பங்குகள் வரை பாரபட்சம் இல்லாமல் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ந்தன. இதற்கு டாடா குழுமத்தை பங்குகளும் விதிவிலக்கல்ல.
குறிப்பாக, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்பட டாடா குழுமத்தை சேர்ந்த 5 நிறுவன பங்குகளிள் விலை அதன் உச்ச விலையிலிருந்து 16 முதல் 42 சதவீதம் வரை குறைந்துள்ளது. மலிவான விலையில் தற்போது கிடைக்கும் இந்த பங்குகளை வாங்கலாமா என்பது நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ்: நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.681.60ல் முடிவுற்றது. இது இப்பங்கின் உச்ச விலையிலிருந்து 42 சதவீதத்துக்கும் மேலான சரிவாகும். கடந்த ஜூலை 30ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,179..05ஐ எட்டியது. எலாரா கேபிட்டல் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்கலாம் ரேட்டிங் செய்துள்ளது மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.909ஆக மதிப்பீடு செய்துள்ளது. அதேசமயம், தரகு நிறுவனமான இன்கிரெட் ஈக்விட்டீஸ், டாடா மோட்டார்ஸ் பங்கு குறித்த மதிப்பீட்டை குறைக்கலாம் என மதிப்பீடு செய்துள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.661ஆக நிர்ணயம் செய்துள்ளது.
டிரெண்ட்: டாடா குழுமத்தின் சில்லரை விற்பனை நிறுவனம் டிரெண்ட் லிமிடெட். இந்நிறுவன பங்கு நேற்று அதன் உச்சவிலையிலிருந்து 40 சதவீதத்துக்கு மேலான குறைந்த விலையில் வர்த்தகமாகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் டிரெண்ட் லிமிடெட் பங்கின் விலை ரூ.4,997.35ல் முடிவுற்றது. கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.8,345.85ஐ எட்டியது.எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் டிரெண்ட் பங்கு குறித்து, விற்கலாம் என்ற தனது மதிப்பீட்டை தொடருகிறது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.4,200ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதேசமயம் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் டிரெண்ட் பங்குகளை வாங்கலாம் என மதிப்பீடு செய்துள்ளது மற்றும் இப்பங்கின் இலக்கு விலையாக ரூ.7,100ஐ குறிப்பிட்டுள்ளது.
டாடா ஸ்டீல்: டாடா ஸ்டீல் நிறுவனம் ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவன பங்கின் விலை தற்போது அதன் உச்சத்தை காட்டிலும் 27 சதவீதத்துக்கும் கூடுதலான சரிவில் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் டாடா ஸ்டீல் பங்கின் விலை ரூ.134.50ஆக இருந்தது. கடந்த ஜூன் 18ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டாடா ஸ்டீல் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான 184.60ஐ எட்டியது. மேனேஜ்மென்ட் என்டிரவோர் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டை கொடுத்துள்ளது.மேலும் பங்கின் இலக்கு விலையாக ரூ.171ஐ நிர்ணயம் செய்துள்ளது. பிஎல் கேபிட்டல் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு குவிக்கலாம் (கூடுதலாக வாங்கலாம்) என்றும் இலக்கு விலையை ரூ.145ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது.
டைட்டன் கம்பெனி: கடிகாரம் மற்றும் நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் டாடா குழும நிறுவனம் டைட்டன் கம்பெனி லிமிடெட். கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.3,219ஆக இருந்தது. இது அதன் 52 வார உச்ச விலையை காட்டிலும் சுமார் 17 சதவீதம் குறைவாகும். கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.3,866.15ஆக இருந்தது. ஆன்டிகியூ ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் டைட்டன் கம்பெனிக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டையும், இலக்கு விலையாக ரூ.4,184ஆக நிர்ணயமும் செய்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் டைட்டன் நிறுவனத்துக்கு வாங்கலாம் என்றே மதிப்பீடு வழங்கியுள்ளது. அதேசமயம் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.4,000ஆக நிர்ணயம் செய்துள்ளது.
டிசிஎஸ்: நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் டிசிஎஸ். கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று டிசிஎஸ் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.4,585.90ஐ எட்டியது. தற்போது இப்பங்கு அதன் உச்சவிலையை காட்டிலும் சுமார் 16 சதவீதம் குறைவான விலையில் வர்த்தமாகிறது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.3,869.45ல் முடிவுற்றது. கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், டிசிஎஸ் பங்குக்கு add என்று மதிப்பீடு வழங்கியுள்ளது மற்றும் பங்கின் இலக்கு விலையை ரூ.4,550ஆக நிர்ணயம் செய்துள்ளது. பிஎன்பி பரிபாஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துக்கு outperform (சிறப்பாக செயல்படும்) மதிப்பீட்டை வழங்கியுள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.4,750ஐ குறிப்பிட்டுள்ளது.