2025-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வீட்டு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வரிச் சலுகையை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது சுய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் 2 வீடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த முக்கிய அறிவிப்பு வீடு வாங்குவோரின் நிதிச் சுமையை குறைத்துள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "தற்போது வரி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தங்கள் பயன்பாட்டுக்கு வாங்கக்கூடிய சொத்துகளுக்கு வரி விலக்கு கோர முடியும். வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல் இரண்டு வீடுகள் வரை வாங்கிக் கொள்ளலாம்", என்று கூறினார். இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோர் மத்தியில் ஆதரவு குவியத் தொடங்கியுள்ளது.

சார்ட்டட் அக்கவுண்டண்ட் மற்றும் நிதி கல்வியாளரான சக்சி ஜெயின், "2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வீடு வாங்குவதை மிகவும் மலிவு விலையில் பெறக்கூடியதாக மாற்றியுள்ளது", என்று கூறியுள்ளார்.
முன்பு, ஒரு வீட்டிற்கு மட்டுமே வரி நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது இரண்டு வீடுகளுக்கு இந்தச் சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு நபர் இரண்டு வீடுகளில் வசித்து வந்தால், இரண்டு வீடுகளுக்கும் வரிச் சலுகை பெறலாம்.
ஒரு உரிமையாளர் இரண்டு வீடுகளை வைத்திருந்தார் என்றால் இரண்டு வீடுகளையும் பயன்படுத்தினாலும் மற்றொரு வீடு வீட்டிற்கு வாடகை வருமானம் வருவதாக கணக்கிடப்பட்டு அதற்கு வரி விதிக்கப்பட்டது. இது வேலை மற்றும் தனிப்பட்ட காரணமாக குடிப்பெயர்ந்த உரிமையாளர்களுக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.
உதாரணமாக ஒரு நகரத்தில் ஒருவர் வேலை செய்து கொண்டிருப்பார். மற்றொரு நகரத்தில் அவருடைய குடும்பம் வசிக்கும். எனவே இரண்டு வீடுகளும் வைத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அப்படி இருந்தும் அதற்கு வரி செலுத்தி வந்தனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த வரி சலுகை நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதோடு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவித்து வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் இது அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.