ARTICLE AD BOX
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த மகா கும்பமேளாவை முன்னிட்டு, இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடலில் கலந்து கொண்டுள்ளனர்.
தினமும் கோடிக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த திருவிழாவில், மாணவ மாணவிகள் பக்தர்களுக்கு உதவியாக சில விசயங்களை செய்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெருக்கடியால், டாக்சி மற்றும் ரிக்சா சேவைகள் முடங்கியுள்ளன.
ரெயில்வே நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றில் இருந்து பக்தர்களை வெளியே கொண்டு வந்து திரிவேணி சங்கமத்திற்கு அழைத்து செல்ல அவர்களுக்கு பல மணிநேரம் எடுக்கிறது.
இதனால், இரு சக்கர வாகன சேவையை கல்லூரி மாணவ மாணவிகள் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதற்காக மோட்டார் சைக்கிள்கள் முதல் ஸ்கூட்டர்கள் வரை பயன்படுத்தும் அவர்கள், ஒரு சவாரிக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரை கட்டண தொகையாக பெற்று கொள்கிறார்கள்.
இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது என பீட்டர் என்ற முதுநிலை மாணவர் கூறுகிறார். இவர்கள் மட்டுமினிறி லடாக்கில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் லால் பகதூர் என்பவர் கூட இந்த பணியில் இறங்கியுள்ளார்.
அவர் கூறும்போது, இதனால் எனக்கும், பக்தர்களுக்கும் பலன் கிடைக்கிறது. புனித யாத்திரை செல்பவர்களுக்கு உதவும் அதே நேரத்தில், எரிபொருள் செலவுக்கான தொகை எனக்கு கிடைக்கிறது என்று அவர் கூறுகிறார்.
ஒரு சிலர் இந்த சேவையை வரவேற்ற போதிலும், வேறு சிலர் அதிக கட்டணம் என விமர்சிக்கின்றனர். இதனால், புனித நீராடுவதற்காக தங்களுடைய உடமைகளை சுமந்து கொண்டு நடந்தே செல்கின்றனர்.