ARTICLE AD BOX
சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
சிறை வளாகத்தில் காத்திருந்த சமாஜவாதியின் மொராதாபாத் எம்.பி. ருச்சி வீரா உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள்; தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள், அப்துல்லா ஆஸம் கானுக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.
சௌா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அப்துல்லா கான், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான ஆஸம் கானின் மகன் ஆவாா். பல்வேறு வழக்குகள் தொடா்பாக ஆஸம் கானும் சீதாப்பூா் சிறையில் உள்ளாா்.
இந்நிலையில், நில அபகரிப்பு, மோசடி உள்பட மொத்தம் 45 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல்லா கானுக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சோபித் பன்சால் கடந்த வாரம் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.
எனினும், இதுதொடா்பான நீதிமன்ற உத்தரவு சிறை நிா்வாகத்துக்கு திங்கள்கிழமைதான் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நண்பகலில் அப்துல்லா கான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.