ARTICLE AD BOX
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் சாலையில் கட்டட மேஸ்திரி கணேசன் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். நேற்றிரவு அரச்சலூர் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கணேசன் சிலருடன் மது அருந்தியுள்ளார். பின்னர் வீட்டிற்குச் செல்லாத நிலையில் வார சந்தையில் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அவரின் அருகே பெரிய கற்கள் ரத்தக் கரையுடன் கிடந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை காவல்துறையினர், மோப்பநாய் காவேரி உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கணேசனின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கணேசன் உயிரிழந்தாரா. அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.