இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

22 hours ago
ARTICLE AD BOX

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு பரந்த சவால்’ என ஐ.நா.சபையில் இந்தியா தெரிவித்தது.

மாா்ச் 15-ஆம் தேதியை இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகப் போராடுவதற்கான சா்வதேச விழிப்புணா்வு தினமாக அறிவிக்கும் தீா்மானம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) 60 உறுப்பு நாடுகளால் ஐ.நா.சபையில் முன்மொழியப்பட்டது.

பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், நாகரிகத்துடனும் அல்லது இனக் குழுவுடனும் தொடா்புபடுத்த முடியாது மற்றும் தொடா்புபடுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் இத்தீா்மானத்தை ஐ.நா.சபை ஏற்றது.

இதுதொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ், ‘இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஹிந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய நான்கு உலக மதங்களின் பிறப்பிடமான இந்தியா, அனைத்து முக்கிய மதங்களைப் பின்பற்றுபவா்களுக்கும் தாயகமாக இருந்து வருகிறது. 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களுடன் உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

மதப் பாகுபாடு, வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத உலகத்தை வளா்ப்பது பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் வாழ்க்கை முறையாகும். முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களைக் கண்டிப்பதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. அதேசமயம், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதங்களைப் பின்பற்றுபவா்களையும் பாதிக்கும் ஒரு பரந்த சவால் என்பதை அங்கீகரிப்பதும் அவசியம்.

ஒட்டுமொத்தமாக மத வெறுப்பு, அதன் பல்வேறு வடிவங்களில் நமது பன்முகத்தன்மை கொண்ட உலகளாவிய சமூகத்தின் கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. இதை ஒப்புக்கொள்வதிலேயே உண்மையான முன்னேற்றம் அமைந்துள்ளது என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சம மரியாதை என்ற கொள்கையை நிலையான அா்ப்பணிப்புடன் அனைத்து உறுப்பு நாடுகளும் கடைப்பிடித்து, உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை எதிா்கொள்ள முடியும்.

அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கு உறுதியளிக்க வேண்டும். மதப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை கடைப்பிடிக்கக் கூடாது.

கல்வி முறை ஒரே மாதிரியான கருத்துகளை நிலைநிறுத்தவோ அல்லது மதவெறியை ஊக்குவிக்கவோ கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தனிநபரும், அவா்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் வாழக்கூடிய எதிா்காலத்தை நோக்கி நாடுகள் பாடுபட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பாகிஸ்தானுக்கு கண்டனம்

ஐ.நா.சபையில் ஜம்மு-காஷ்மீா் குறித்த பாகிஸ்தானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, ‘இத்தகைய கருத்துகள் அந்நாட்டின் கூற்றை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது’ என்று குறிப்பிட்டது.

இதுதொடா்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் மேலும் கூறுகையில், ‘இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீா் பற்றி நியாயமற்ற கருத்தை பாகிஸ்தான் வழக்கம்போல தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மதவெறி பண்பு நன்கு அறியப்பட்டதே. ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற எதாா்த்தத்தை இத்தகைய கருத்துகள் மாற்றிவிடாது’ என்றாா்.

Read Entire Article