ARTICLE AD BOX
கலை என்பது மண் சார்ந்தது என்பார்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அப்படி தேனி மாவட்டம் என்றால் விவசாயம், சுற்றுலாத் தலங்கள் என்பதுபோல், பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், சினிமாக் கலைஞர்கள் பலரை தந்த மாவட்டம் என்றால் அது தேனி மாவட்டத்திற்கு இருக்கும் சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என எண்ணற்ற திரைக்கலைஞர்கள் அதிகம். இயற்கை வளம் சார்ந்த மலைகள், அருவிகள், வயல்வெளிப்பரப்புகள் என அதிகம் இருப்பதால், தேனி மாவட்டத்தில் இருக்கும் பலரும் கிரியேட்டிவ் சார்ந்த பணிகளில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. தேனி மாவட்டத்தில் பல இடங்களில் 12 மாதங்களிலும் சூட்டிங் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இதனாலேயே, இந்த மாவட்டத்தில் டப்பிங் ஸ்டுடியோ, இசைகோர்ப்பு ஸ்டுடியோ, எடிட்டிங் ஸ்டுடியோவினைக் காணமுடிகிறது.
இளையராஜா:
இந்திய சினிமாவில் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மபூஷண் விருதை வாங்கியவர். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த பண்ணைப்புரம் என்னும் அழகிய கிராமத்தைச் சார்ந்தவர். இளையராஜா பண்ணைப்புரத்தில் 1943ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். இசைகளில் பல சாதனைகளை செய்த இளையராஜா, மார்ச் 6ஆம் தேதி லண்டனில் ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை மேடையில் ஒலிக்கச் செய்தார். மகிழ்ச்சி என்றாலும் சரி, சோகம் என்றாலும் சரி நம்மில் பலர் இளையராஜா இசையமைத்தப் பாடல்களை கேட்பதுண்டு. அதுதான் இளையராஜாவின் மந்திரம்!
இயக்குநர் பாரதிராஜா:
செட்டுகளுக்குள் அடைபட்டுக்கிடந்த சினிமாவினை முதன்முறையாக கிராமங்களை நோக்கி '16 வயதினிலே’ என்னும் தனது முதல் படத்திலேயே கொண்டு வந்த பெருமை, இயக்குநர் பாரதிராஜாவுக்கு உண்டு. பாரதிராஜா, தேனி மாவட்டத்தின் அல்லிநகரத்தில் 1941ஆம் ஆண்டு, சூலை 17ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தியிலும் படங்களை இயக்கி, இயக்குநர் இமயம் என்ற பெயரைப் பெற்றவர்.
சீதகோக சிலகா(தெலுங்கு - அலைகள் ஓய்வதில்லை கதை), முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, கடல் பூக்கள் ஆகிய ஆறு படங்களுக்காக தேசிய விருது பெற்றவர். இதுபோக, கிழக்கே போகும் ரயில், சிகப்புரோஜாக்கள், முதல் மரியாதை, மண்வாசனை, ஒரு கைதியின் டைரி, கிழக்குச் சீமையிலே போன்ற பல ஹிட் படங்களை இயக்கியவர்.
கவிஞர் வைரமுத்து:
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மெட்டூர் என்னும் கிராமத்தைச் சார்ந்தவர், வைரமுத்து. வைகை அணையின் நீர்பிடிப்புப் பகுதியான அவ்வூரில் இருந்து அணை கட்டியபின், அவரது குடும்பம், அருகிலுள்ள வடுகபட்டிக்கு புலம்பெயர்ந்தது. இதனால் அவரது வளரிளம் முழுவதும் வடுகபட்டியைச் சுற்றியே இருந்தன. சிறுவயதுமுதலே தமிழ் மீது ஆர்வம்கொண்டிருந்த வைரமுத்து, நிழல்கள் என்னும் படத்தில் அதுஒரு பொன்மாலைப் பொழுது என்னும் பாடல் மூலம் திரைக்கவிஞர் ஆனார். தமிழில் எத்தனையோ காதல் ரசம் மிக்க பாடல்களை அதன் சுவை குறையாமல் புது புது வார்த்தைகளை நிரப்பி தமிழ்ச்சமூகத்துக்குத் தந்தவர்.
முதல் மரியாதை படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் முதன்முறையாக 1985ஆம் ஆண்டு தேசிய விருதுபெற்றார்,கவிஞர் வைரமுத்து. அதன்பின், ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை, கருத்தம்மா படத்தில் வரும் ’போராளே பொன்னுத்தாயி’ மற்றும் பவித்ரா படத்தில் வரும் ‘உயிரும் நீயே’; சங்கமம் படத்தில் வரும் ‘முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்’, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’, தர்மதுரை படத்தில் வரும் ‘எந்தப் பக்கம் காணும்போதும் வானமுண்டு’ஆகியப் பாடல்களுக்கு தேசிய விருதுபெற்றவர்.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த பிற கலைஞர்கள்:
இவர்கள் தவிர, இயக்குநர் கஸ்தூரி ராஜா, இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் தேனி மாவட்டம் - மல்லிங்காபுரத்தைச் சார்ந்தவர்கள்.
இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சார்ந்தவர். நகைச்சுவை நடிகர் சிங்கம் புலி பெரியகுளத்தையும், காமெடி நடிகர் வையாபுரி தேனியையும் சார்ந்தவர்கள். தெலுங்கு ஹீரோ டாக்டர் ராஜசேகர் தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தையும் சேர்ந்தவர். கவிஞர் மு. மேத்தா பெரியகுளத்தையும், கவிஞர் நா.காமராசன் போடி மீனாட்சிபுரத்தையும் சார்ந்தவர்கள்.
பழம்பெரும் நடிகர்களான எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் ஆகியோர் பெரியகுளத்தைச் சார்ந்தவர்கள். அதேபோல் இயக்குநர் பாலா பெரியகுளத்தையும், நடிகர் செல்வா லட்சுமிபுரத்தையும், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தேனியையும் சார்ந்தவர்கள். இயக்குநர் மற்றும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தேனி - வடபுதுப்பட்டியையும் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை எடுத்த அனீஸ்ஸும் தேனி மாவட்டத்தையும் சார்ந்தவர்கள் ஆவர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்