ARTICLE AD BOX
முருங்கைக்காய்களைத் துண்டுகளாக்கிய பின் அப்படியே சாம்பாரில் போடாமல், நடுவே இரண்டாக கீறிவிட்டுப் போட்டால் சுவை கூடுவதுடன் சீக்கிரம் வெந்தும்விடும்.
மாவு பிசையும்போது ஒன்றிரண்டு ஸ்பூன் சோளமாவை சேர்த்துப்பிசைந்துகொண்டால் பூரி உப்பலாகவும், நெடுநேரம் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடியாக்கும்போது, சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு தூளாகிவிடும்.
சாம்பார் செய்யும்போது புளியின் அளவைக் குறைத்து, தக்காளிப்பழங்களை சேர்த்துக்கொதிக்கவிட்டால் சுவை கூடுவதுடன் எல்லாவித டிபன் வகைகளுக்கும் இந்த சாம்பார் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
குக்கரில் காய்களை வேகவைக்கும்போது சிறியவை என்றால் முழுதாகவும், பெரியவை எனில் பெரிய துண்டுகளாகியும், தோலுடன் வேகவிடலாம். வெந்ததும் தோல் உரித்து துண்டுகளாக்க எளிதாக இருக்கும்.
அடைக்கு பருப்புகள் ஊறவைக்கும்போது, கூடவே கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, காராமணி போன்ற பயறு வகைகளையும் ஒவ்வொரு கைப்பிடி சேர்த்து ஊறவைத்து அரைத்தால், அடை பிரமாதமாக இருக்கும்.
கட்லெட்டை மட்டும்தான் பிரெட் தூளில் பொரிக்க வேண்டும் என்பதில்லை. வடைகள் பொரிக்கும்போது பிரெட் தூளில் ஒற்றி எடுத்துப்பொரித்தால் நீண்ட நேரம் வடைகள் மொறுமொறுவென்று இருக்கும்.
ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் ட்ரேயை தொடர்ந்து பயன் படுத்தும்போது அதிலிருந்து பால் வாசனை வரும். ட்ரேயை அவ்வப்போது சுடுநீரில் சுத்தம் செய்தால் அந்த வாசனை அறவே நீங்கிவிடும்.
வாங்கி வந்த பப்பாளி, வாழைப்பழம் போன்றவை காயாகவே இருக்கிறதா? அவற்றை செய்தித்தாளில் சுற்றி வைக்கவும். அந்தப் புழுக்கத்திலேயே மறுநாள் பழுத்துவிடும்.
வாழைப்பூவை ஆய்ந்ததும், மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் உதிர் உதிராகிவிடும். பிறகு பொரியல் செய்வது சுலபம். பொடியாக நறுக்கும் நேரமும் மிச்சம்.
சீரகத்தில் பூச்சிகள்,சிறு வண்டுகள் வராமல் இருக்க அதனுடன் சில மிளகுகளை போட்டு வைத்தால் போதும்.
கீரைவகைகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை எப்போதும் தனித்தனி கவரில்தான் போட்டு வைக்கவேண்டும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக வைக்கும்போது சீக்கிரமே அழுகிவிடும்.