இலங்கை கடற்படையால் 32 தமிழக மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு!

2 days ago
ARTICLE AD BOX

இலங்கை கடற்படை அட்டூழியம்

மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். புயல், மழை, சூறாவளி, சுனாமி என பல வகைகளில் இடையூறு இருந்தாலும் அதை விட இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையானது கைது செய்து வருகிறது. அதன் படி, இலங்கை அரசால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து 365க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் இழப்பு

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. இது மட்டுமில்லாமல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பல லட்சம் அபராதமும் விதித்துள்ளது. ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல லட்சம் அபராதம் விதிப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி விரட்டி பிடித்து வருகிறது. இதனால் மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசும் மத்திய அரசுக்கு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

இந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாக இன்று அதிகாலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, கச்சத்தீவு பகுதி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கையில் உள்ள தலைமன்னார் துறைமுகத்திற்கு மீனவர்களை அழைத்து சென்ற இலங்கை கடற்படை  இன்று காலை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article