அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. 20 நாட்களுக்கு முன்பு அமெரிக்க பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. அமெரிக்க பொருளாதாரம் உறுதியான வேகத்தில் வளர்ந்து வருவதாக தோன்றியது. மேலும், மந்தநிலைக்கான அறிகுறிகள் எங்கும் தென்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா பொருளாதாரம் மந்தநிலையை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போ எல்லா இடத்திலும் மந்தநிலை என்ற வார்த்தை பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மந்தநிலை குறித்த அச்சங்கள் அமெரிக்க பங்குச் சந்தையை கதற விடுகின்றன.
அதிபர் டொனால்ட் டிரம்பும், அவரது பொருளாதார குழுவும் தற்போது மந்தநிலை குறித்த கேள்விகளை எதிர்கொள்கின்றனர். மேலும் பொருளாதாரம் குறித்து பெருகி வரும் நடுக்கங்களை குறைக்க தவறிவிட்டனர். கடந்த திங்கட்கிழமையன்று S&P500 இன்டெக்ஸ் 3 சதவீதம் சரிந்தது. கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று S&P500 இன்டெக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த இன்டெக்ஸ் இதுவரை 9 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை சந்தித்தன. டவ் சுமார் சுமார் 1 சதவீதம் சரிந்தது. நாஸ்டாக் பங்குச் சந்தையும் சரிந்தது. கனடாவிலிருந்து ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 50 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து பங்குச் சந்தையில் பங்கு விற்பனை தீவிரமடைந்தது.

முதலீட்டாளர்கள் சந்தையின் ஆபத்தான பகுதியிலிருந்து வெளியேறி, சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற முதலீட்டுக்கு பாதுகாப்பான துறைகளை சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வதில் தீவிரமாக உள்ளனர். இதனால் ஐடி பங்குகள் அதிகளவில் விற்பனையாகிறது. முதலீட்டு ஆலோசனை நிறுவனமான யார்டேனியின் ரிசர்ச் தலைவர் எட் யார்டேனி கூறுகையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் டிரம்பின் 2.0 கொள்கைகளில் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறது. டிரம்ப் நிர்வாகம் திட்டமிடப்படாத விளைவுகளுடன் மிகக் குறுகிய காலத்தில் பல இலக்குகளை நிறுவ அவரசப்படுவதால் இப்போது எல்லாம் ஆபத்தில் உள்ளது என்ற தெரிவித்தார்.
அமெரிக்க கருவூலத்தின் முன்னாள் செயலாளர் லாரி சம்மர்ஸ் பேட்டி ஒன்றில், மந்தநிலைக்கான உண்மையான சாத்தியம் இருக்கிறது. பலவீனமான பொருளாதாரம் பலவீனமான சந்தைகளுக்கு வழிவகுக்கும், பின்னர் பலவீனமான சந்தைகள் பலவீனமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் ஒரு தீய சுழற்சிக்கான உண்மையான சாத்தியக்கூறு நம்மிடம உள்ளது. வரி விதிப்பு இரண்டு விளைவுகளை கொண்டுள்ளன. முதலாவது அவை விலைகளை உயர்த்துகின்றன இரண்டாவது அவை வளர்ச்சியை குறைக்கின்றன. டிரம்ப் நிர்வாகம் இந்த மீண்டும் மீண்டும் அணுகுமுறையால் விஷயங்களை மோசமாக்குகிறது. நிச்சயமற்ற நிலை இருக்க வேண்டியதை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
பிரபல பன்னாட்டு முதலீட்டு வங்கியும் நிதி சேவை நிறுவனமுமான கோல்ட்மேன் சாக்ஸ் கூறுகையில், அடுத்த 12 மாதங்களில் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட 20 சதவீதம் வாய்ப்புள்ளது. கோல்ட்மேன் தனது முந்தைய கணிப்பில் மந்தநிலை ஏற்பட 15 சதவீதம் அளவுக்கே சாத்தியம் உள்ளது என கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கொள்கை மாற்றங்கள் முக்கிய ஆபத்தாக கருதுவதால், தற்போது மந்தநிலைக்கான சாத்திய அளவை உயர்த்தி உள்ளோம். எதிர்மறையான அபாயங்கள் மிகவும் தீவிரமாக தோன்றத் தொடங்கினால் வெள்ளை மாளிகை பின்வாங்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மந்தநிலை தோன்றினால், டிரம்ப் உடனடியாக வரிகளை குறைப்பார். மிகவும் மோசமான தரவுகள் இருக்கும் சூழ்நிலையில், வெள்ளை மாளிகை (டிரம்ப் நிர்வாகம்) அதன் கொள்கைகளில் உறுதியாக இருந்தால் மந்தநிலை ஆபத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
உண்மையில் தற்சமயம், அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலைக்கு அருகில் இருப்பதாக தெரியவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் இருந்தது. முதல் காலாண்டு இன்னும் முடியவில்லை. மேலும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் வேலைவாய்ப்பு சந்தை இன்னும் வளர்ச்சி நிலையில் இருந்தது. வேலையின்மை விகிதம 4.1 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பொருளாதாரம் தொடர்ச்சியாக 50வது மாதமாக வேலைவாய்ப்புகளை சேர்த்தது. இது நவீன வரலாற்றில் தடையற்ற வளர்ச்சியின் இரண்டாவது மிக நீண்ட காலமாகும்.
முந்தைய மந்தநிலை அச்சங்களை பின்னோக்கி பார்த்தால் அவை மிகைப்படுத்தப்பட்டவை. உதாரணமாக 2022ம் ஆண்டு மந்தநிலை அச்சத்தை நினைவுகூறுங்கள், அப்போது மந்தநிலைக்கு 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறினர். ஆனால் மந்தநிலை நிகழவில்லை. மந்தநிலைக்கான ஆபத்து ஒப்பீட்டளவில் குறைந்த மட்டங்களிலிருந்து உண்மையில் அதிகரித்துள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை, அந்நாட்டின் பொருளாதாரத்துக்கே பெரிய வேட்டு வைக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வரி விதிப்போம் என்று மிரட்டினால் மற்ற நாடுகள் பணிந்து விடும் என்று டிரம்ப் தப்பு கணக்கு போட்டு விட்டார் என்று தோன்றுகிறது. ஏற்கனவே சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்கும் முடிவில் உள்ளன. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க தொடங்கி விட்டது. முதல் கட்டமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் ரத்து செய்ய ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் மாத மத்தியில் அமெரிக்க பொருட்களை குறிவைத்து கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளை அறிவிக்கவும் தயாராகி வருகிறது. மற்ற நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க தொடங்கினால் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும், அவர்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். அது அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.
Written by: Subramanian