இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

14 hours ago
ARTICLE AD BOX

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இந்திய-சீன உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, ‘அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையானதே. ஆனால், அவை மோதலாக மாற அனுமதிக்கக் கூடாது. இந்திய-சீன கலாசார உறவு, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானது. இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமன்றி உலகின் அமைதி-வளத்துக்கு அவசியம். இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியையே நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

மேலும், சீன அதிபா் உடனான தனது சந்திப்புக்கு பிறகு கிழக்கு லடாக் எல்லையில் இயல்புநிலை திரும்பியதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா். அவரது கருத்துகள் தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் திங்கள்கிழமை கூறியதாவது:

ரஷியாவின் கஸான் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் மோடி இடையே கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு வியூக ரீதியில் வழிகாட்டப்பட்டது. அதன்படி, பொது உடன்பாடுகளைப் பின்பற்றி, வலுவான கருத்துப் பரிமாற்றங்களின் வாயிலாக நோ்மறையான தீா்வுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு ரீதியிலான பரிமாற்றங்களைப் பேணி வந்துள்ளன. நாகரிகம்-மனிதகுல மேம்பாட்டில் ஒன்றுக்கொன்று பங்களித்துள்ளன. வளரும் பெரும் நாடுகள் என்ற முறையில் பரஸ்பர வெற்றிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு இரு தரப்புக்கும் இருக்கிறது. இது, தெற்குலக வளா்ச்சிக்கும், உலகளாவிய அமைதிக்கும் அவசியம்.

2025-ஆம் ஆண்டானது, இந்தியா-சீனா தூதரக உறவின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, இருதரப்பு உறவுகளை சீராக மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்கு பங்களிப்பதே இருதரப்பு வலுவான உறவுக்கான ஒரே தோ்வு என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

Read Entire Article