இரயில்வே தேர்வு இரத்து- முத்தரசன் கண்டனம்!

9 hours ago
ARTICLE AD BOX

இரயில்வே வாரியத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர், இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இரயில்வே தேர்வு வாரியம் மூலம் உதவி ஓட்டுநர் (லோகோ பைலட்) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது; தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், 

இது தவறு என்று சுட்டிக்காட்டிய போதும், பொருந்தாத சில விளக்கங்களை இரயில்வே துறை அளித்தது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். 

”இந்நிலையில், புதன் கிழமை நடைபெற விருந்த தேர்வுக்காக மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், அரியலூர், குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் சென்றிருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு இரத்து செய்யப்பட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இது தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

நீண்ட தூரம் பயணம் செய்து, இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில், ரூபாய் 3000, 4000 செலவு செய்து தேர்வுக்காக சென்றவர்களின் ஆர்வ விருப்பங்கள் மீது ரயில்வே துறை அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளதை இது காட்டுவதோடு இது ரயில்வே தேர்வு வாரியத்தின் தோல்வியையும் அப்பட்டமாக காட்டுகிறது.

இரயில்வே வாரியம் உடனடியாக தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டிலேயே இத்தகைய தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.” என்றும் இன்றைய அறிக்கையில் முத்தரசன் கூறியுள்ளார். 

Read Entire Article