இப்படியுமா மட்டம் தட்டுவது?

2 days ago
ARTICLE AD BOX

டிராகன் திரைப்படத்தால் டான் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் டிராகன் திரைப்படத்தால் ஒரு படம் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

என்ன படம்? சொல்லித்தெரிய வேண்டாம் என்கிற அளவிற்கு டிராகன் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் டான் படம்போல் இருக்கிறதே என ஆரம்பித்துவிட்டனர்.

படக்குழுவுக்கு முதல் நெகடிவ் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காமல் பின் இயக்குநராகி படித்த கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராகச் செல்வதுடன் படம் முடிவடையும். இப்படம் வெளியானபோது எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தாலும் சின்னச்சின்ன நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுக்க படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், ரசிகர்களுக்கு என்னவோ ஒரு ‘கிரிஞ்’ படமாகவே தோற்றமளித்திருக்கிறது. பிரதீப்பின் வசனங்கள், டிரைலர் காட்சிகள் ‘டான்’போல இருந்ததால் சமூக வலைதளங்களில், நேர்காணல்களில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எதிர்கொண்ட கிண்டல் கேள்வி, ‘இது டான் இரண்டாம் பாகமா?’ என்றுதான்.

இதையும் படிக்க: ரவி மோகனைத் தொடர்ந்து பெயரை மாற்றிய நடிகர்!

பல மாதங்கள் காத்திருந்து, காத்திருந்து ஒரு படத்தை இயக்கி முடித்து வெளியீட்டிற்குக் கொண்டுவரும்போது படத்தின் இயக்குநரிடம், ‘இது அந்தப் படம் மாதிரி தெரிகிறதே’ என்றால் தாங்க முடியுமா? டிராகன் ஹிட் அடித்ததும் அஷ்வத் ஆரம்பித்துவிட்டார். படக்குழு எங்கெல்லாம் திரையரங்க விசிட் அடிக்கிறார்களோ அங்கெல்லாம், ‘இது டான் - 2 இல்லை, டிராகன்!’ என கத்திக்கொண்டிருக்கிறார்.

‘நான் சிவனேன்னுதாண்டா இருந்தேன்’ என்பதுபோல் இப்போது டான் படம் சமூக வலைதளங்களில் அடிவாங்க ஆரம்பித்துவிட்டது. இதனால், சிவகார்த்திகேயனுக்கு துளி பாதிப்பும் இல்லை. டான் - 2 இல்லை என்பதற்காக டிராகன் வசூலில் எந்த மாற்றமும் ஏற்படபோவதுமில்லை.

ஆனால், டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்திக்குதான் சிக்கல். டான் முடிந்ததும் ரஜினியை வைத்து படம் இயக்க சிபிக்கு வாய்ப்பு கிடைத்தது. கதை பிரச்னையால் அப்படம் கைவிட்டுப்போக நானியிடம் கதை சொன்னார். நானிக்கு சில படங்கள் ஹிட் ஆனதும் மெல்ல பின்வாங்கினார். என்ன செய்வது என தடுமாறியவருக்கு தன் 24-வது படத்தை இயக்க சிவகார்த்திகேயன் மீண்டும் வாய்ப்பளித்தார்.

ஆனால், அமரன் ஹிட் அடிக்க எஸ்கே தன்னுடைய இடத்தை பலமாக்க சுதா கொங்காரா படத்தில் இணைந்தார். இப்போது, சிபி - சிவகார்த்திகேயன் படம் டிராப் என்கிறார்கள். அண்மை நிலவரப்படி, மீண்டும் நானி படத்தை இயக்க சிபி ஒப்பந்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?

இப்படி, டான் படத்திற்குப் பின் அடுத்த படத்தை இயக்க முடியாமல் ஒரு இயக்குநர் அலைந்துகொண்டிருக்கும்போது சக இயக்குநரே, ‘இது டான் - 2 இல்லை’ என கிடைக்கிற இடங்களிலெல்லாம் பேசிவருவது சரியா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஒரு படத்தை உயர்த்த இன்னொன்றை மட்டம் தட்டுவது எந்த விதத்தில் சரி என்றும் குரல்கள் ஒலித்துவருகின்றன. கேட்க வேண்டியவர்கள் கேட்பார்களா?

Read Entire Article