ARTICLE AD BOX
ரேவா,
மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மற்றும் மாமியார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவா மாவட்டம் மெஹ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ் திவாரி (27 வயது). இவரது மனைவி பிரியா சர்மா (24 வயது). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். பிரியாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிவபிரகாஷ், திருமண வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்துள்ளார்.
இதற்கிடையே சிவபிரகாஷ் ஒரு விபத்தில் சிக்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் போயுள்ளது. இந்த நேரத்தில், பிரியா குழந்தையை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். தனது மனைவியை சமாதானம் செய்ய சிவபிரகாஷ், மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் பிரியா, அவருடன் வர மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிவபிரகாஷ் இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி மற்றும் மாமியார் இருவரும் தனது குடும்பத்தையே உடைத்துவிட்டதாகவும், அவர்களே தனது தற்கொலைக்கு காரணம் என்றும், சிவபிரகாஷ்நேரலையில் தெரிவித்திருந்தார்.
சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொள்ளும் 44 நிமிட நேரலையை அவரது மனைவி பிரியாவும், மாமியாரும் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரியா மற்றும் அவரது தாய் கீதா துபே (60 வயது) இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.