ARTICLE AD BOX
இன்று வானிலை எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. வெளியே செல்லும் பலருக்கு, வெயிலா...,மழையா...,புயலா... என்பதை பார்த்த பிறகே நிம்மதி ஏற்படும். விமானம், கப்பல் போக்குவரத்து முதல் மீனவர்கள் மீன் பிடிக்க சொல்வது வரை, சில நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வது வரை... வானிலையை மையப்படுத்தியே நடைபெறுவதால், வானிலை மக்களின் வாழ்க்கையோடு இன்று ஒன்றிவிட்டது.
ஒரு நாட்டை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக முன் கூட்டியே இயற்கை மாற்றங்களை அறிவதற்காக ஏற்படுத்தப்பட்டதே வானிலை ஆய்வு மையம். இது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கம் அல்ல... வானவியல் அறிஞர்களான இந்தியாவின் ஆரியபட்டா, கிரேக்க நாட்டின் அரிஸ்டாட்டில் காலங்களிலேயே இது அறிமுகமானது தான். விவசாயம் மற்றும் கடல் வழி பயணங்களுக்கு வானிலையை அறியும் ஆற்றலை அந்த காலத்திலேயே கற்று பயன்படுத்தியிருக்கிறார்கள்.
காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி பெற்ற வானிலை அறியும் கலை, 1854 ம் ஆண்டு முழு வளர்ச்சி பெற்றது. இங்கிலாந்து நாட்டில் வானிலையை அறிவதற்காக 'பிட்ஸ் ராய்ஸ்' வானிலை ஆய்வு மையம் முதல் முறையாக அமைக்கப்பட்டது. கடல்வழி கப்பல் பயணங்களை தடங்கலின்றி மேற்கொள்ளவே இந்த மையம் அமைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து பல நாடுகளில் வானிலை ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டன.
இந்தியாவில் முதல் முறையாக 1889 ம் ஆண்டு கொல்கத்தாவில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் சில நாடுகளில் மட்டுமே வானிலை மையங்கள் இயங்கிய போது தங்களின் தேவைக்காக மட்டுமே தகவல்களை பயன்படுத்தி வந்தனர்.
'வானிலை', என்பது பொதுவான விஷயம். அந்த தகவல்களை எல்லோரும் பகிர்ந்து கொள்வது அவசியம் என்ற சிந்தனை 1873 ம் ஆண்டு தோன்றியது. அதன் விளைவாக சர்வதேச வானிலை அமைப்பு ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் தொடங்கியது. இந்த அமைப்பில் பல நாடுகளும் உறுப்பினர்களாகி ஆய்வுகளை மேற்கொண்டனர். இன்று 189 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன.
கால நிலை, தட்பவெப்பநிலை மாற்றம், நீர் ஆதாரம் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு மேற்கொள்வதில் ஐ.நா சபை ஆர்வம் காட்டியது. அதன் விளைவாக அது வானிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1950 ம் ஆண்டு மார்ச் 23 அன்று உலக வானிலை அமைப்பை உருவாக்கியது. இதில் எல்லா நாடுகளும் உறுப்பு நாடுகளாக சேர்ந்தது. உணவு, விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பான தண்ணீர், வறுமை ஒழிப்பு மற்றும் இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற முக்கியமான பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.
வானிலை பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக வானிலை அமைப்பு தோன்றிய மார்ச் 23 ம் தேதியை உலக வானிலை தினமாக ஐ.நா சபை அறிவித்தது.1961 ம் ஆண்டிலிருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை மையக்கருவாக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்: “முன்கூட்டிய எச்சரிக்கை இடைவெளியை ஒன்றாக மூடுதல்”.
உலக வானிலை அமைப்பு மற்றும் வானிலை சமூக ஆர்வலர்கள் இந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலக வானிலை நிறுவனம் பல நாடுகளின் வானிலை அமைப்புகளின் உதவியுடன் காலநிலை குறிப்புகளை சேகரித்து காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தும் முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். நம் இந்திய வானிலை துறையும் இதற்கு ஒத்துழைப்பு தந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. கால நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தி, பேரிடர்களிலிருந்து இவ்வுலகை பாதுகாக்க நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்பது இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம்.