இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் வசிப்பவர்கள் ரியல் எஸ்டேட் முதலீடு செய்வதும் குடியிருப்புகளை வாங்குவதும் குறைந்துவிட்டது என சொல்லப்படுகிறது. எனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களை நோக்கி வலையை வீசுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் விற்பனையாகும் நான்கில் ஒரு ஆடம்பர குடியிருப்பு என்ஆர்ஐ-களால் வாங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாங்கும் மதிப்பு அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஎல்எஃப் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஆகாஷ் வெளியிட்டுள்ள தகவலின் படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இந்தியாவில் ஆடம்பர குடியிருப்புகளை வாங்கி குவிக்கின்றனர் என கூறுகிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்வதாக தெரிவிக்கிறார்.
2024 ஆம் நிதி ஆண்டில் டிஎல்எஃப் நிறுவனம் விற்பனை செய்த குடியிருப்புகளில் 23 சதவீத குடியிருப்புகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் வாங்கி இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது என அவர் தெரிவிக்கிறார். 2020ஆம் ஆண்டு 5 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டு 14 சதவீதமாகவும் இருந்தது என தெரிவிக்கிறார். குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவதில் தான் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள் என தெரிவிக்கிறார்.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தற்போது உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு நிகராக வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் அதிகரித்து இருக்கிறது என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. இந்திய வளர்ச்சி மீது நம்பிக்கை அதிகரித்திருப்பதே வெளிநாடு வாழ் முதல் இந்தியர்கள் இங்கே முதலீட்டை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என தெரிகிறது. இந்தியாவில் 8 முக்கியமான சந்தைகளில் 2024 ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் விற்பனை 26 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்கள் அனைத்தையும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நோக்கமாகக் கொண்டே தற்போது வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக இந்தியாவின் வலுவான பொருளாதார செயல்பாடு மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் இந்தியாவில் அமைவது உள்ளிட்டவை காரணமாக பிரிமியம் ஹவுசிங் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் உயர்தரமான உலகத்தரமான வசதிகள் கொண்ட குடியிருப்புகளை எவ்வளவு விலையானாலும் கொடுத்து வாங்குவதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தயாராக இருக்கின்றனர் என்றும் ஒன்குரூப் நிறுவனத்தின் இயக்குனர் கூறுகிறார்.