ARTICLE AD BOX
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு இனிப்பு உணவுதான் ஐஸ்கிரீம். கோடை காலத்தில் இதன் தேவை இன்னும் அதிகமாக இருக்கும். கடைகளில் விதவிதமான ஐஸ்கிரீம்கள் கிடைத்தாலும், வீட்டில் தயாரிக்கும் ஐஸ்கிரீம் தனி சுவையையும், மன நிறைவையும் கொடுக்கும். அதிலும் குறிப்பாக, சர்க்கரை சேர்க்காமல் ஐஸ்கிரீம் செய்தால், ஆரோக்கியம் குறித்த கவலை இல்லாமல் அனைவரும் ருசிக்கலாம். தர்பூசணி மற்றும் உலர் பழங்களை வைத்து சுவையான சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீமை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தர்பூசணி ஐஸ்கிரீம்: வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணியை வைத்து ஒரு அருமையான ஐஸ்கிரீமை செய்யலாம். இதற்கு பழுத்த தர்பூசணி பழத்தின் சாறு, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் இனிப்புக்காக சிறிது தேன் இருந்தால் போதும். முதலில் தர்பூசணியை தோல் நீக்கி, விதைகளை அகற்றிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுக்கவும்.
இந்த சாற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த கலவையை ஐஸ்கிரீம் ஊற்றும் அச்சுகளிலோ அல்லது சிறிய கிளாஸ்களிலோ ஊற்றி, காற்று புகாதவாறு மூடி, ஃப்ரீசரில் பத்து மணி நேரம் உறைய வைக்கவும். அவ்வளவுதான், சுவையான மற்றும் ஆரோக்கியமான தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.
நர்ஸ் ஐஸ்கிரீம்: அடுத்ததாக, உலர் பழங்களைப் பயன்படுத்தி சத்தான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு ஒரு கப் பாதாம், ஒரு கப் முந்திரி, ஒரு கப் மக்கானா, பத்து முதல் பதினைந்து பேரீச்சம்பழம், சிறிதளவு கோகோ பவுடர் மற்றும் பால் தேவைப்படும். முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடாக்கி, அதில் பாதாம், முந்திரி மற்றும் மக்கானாவை லேசாக வறுக்கவும். பிறகு, வறுத்த உலர் பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய உலர் பழங்களுடன், விதை நீக்கிய பேரீச்சம்பழம், கோகோ பவுடர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கெட்டியான விழுதாக மாற்றவும். இந்த கலவையை ஒரு கண்ணாடி பாத்திரத்திலோ அல்லது ஐஸ்கிரீம் அச்சுகளிலோ ஊற்றி மூடி, எட்டு முதல் பத்து மணி நேரம் ஃப்ரீசரில் உறைய வைக்கவும். இப்போது சுவையான மற்றும் சத்தான உலர் பழ ஐஸ்கிரீம் தயார்.
இந்த இரண்டு வகையான ஐஸ்கிரீம்களிலும் சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி சாப்பிடலாம்.