மகா கும்பமேளாவில் குளறுபடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். "நமது நம்பிக்கைகள் மற்றும் கோயில்கள், நமது மதம், கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை அடிமை மனநிலையில் சிக்கி இருப்பவர்கள் விமர்சித்து வருகின்றனர்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கும்பமேளா குளறுபடிகள்:

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என மத்திய, மாநில பாஜக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, கும்பமேளாவிற்காக விடப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக மக்கள் காத்திருந்தபோது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு, கும்பமேளா நடக்கும் கங்கை ஆற்றில் மலத்தில் காணப்படும் பாக்டீரியாவின் அதிக அளவில் இருப்பதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளியாகின.

பதிலடி கொடுத்த மோடி:

இதை மேற்கோள் காட்டி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் ஆகியோர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இதற்கு தற்போது பதிலடி அளித்துள்ள பிரதமர் மோடி, "அடிமை மனநிலையில் சிக்கி இருப்பவர்கள் மத நம்பிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில், "இப்போதெல்லாம் மதத்தை கேலி செய்து கிண்டல் அடிப்பவர்கள் மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபடும் தலைவர்களாக இருப்பதைக் காண்கிறோம். வெளிநாட்டு சக்திகளும் இந்த மக்களை ஆதரிப்பதன் மூலம் நாட்டையும் மதத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.

இந்து மதத்தை வெறுக்கும் மக்கள் ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழ்ந்து வருகின்றனர். அடிமைத்தன மனநிலையில் சிக்கிய மக்கள் நமது நம்பிக்கைகள் மற்றும் கோயில்கள், நமது மதம், கலாச்சாரம் மற்றும் கொள்கைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.

இந்த மக்கள் நமது பண்டிகைகள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை திட்டி பேசி வருகிறார்கள். இயல்பிலேயே முற்போக்கான மதத்தையும் கலாச்சாரத்தையும் தாக்கும் துணிச்சல் இவர்களுக்கு இருக்கிறது. நமது சமூகத்தைப் பிரித்து அதன் ஒற்றுமையை உடைப்பதே இவர்களின் திட்டம்" என்றார்.