ARTICLE AD BOX
இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்களை திறக்கும் கூகுள்.. இந்த இரண்டு நகரங்கள் தான் இலக்கு..
டெல்லி: கூகுள் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் தன்னுடைய நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய நேரடி விற்பனை நிலையத்தை தொடங்குவதற்காக இரண்டு இடங்களை இறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன்படி முதல்கட்டமாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இந்த நேரடி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மற்றொரு நாட்டில் நேரடி விற்பனை நிலையங்களை திறப்பது இதுவே முதல்முறையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களின் வளர்ச்சிக்கான முக்கிய சந்தையாக இந்தியாவை கருதுகின்றன.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அண்மையில் தெரிவித்தது. கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அமெரிக்காவில் ஐந்து இடங்களில் நேரடி விற்பனை நிலையங்களை அமைத்து தங்கள் நிறுவனத்தின் பிக்சல் போன்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் நேரடி விற்பனை நிலையங்களை திறந்து இவற்றை விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ளது.
இதற்காக டெல்லி மற்றும் மும்பையில் குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இதே போல தான் இந்தியாவில் தன்னுடைய நேரடி விற்பனை நிலையத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்தது. குறிப்பாக ஐபோன்கள் விற்பனை முன்பை விட உயர்ந்துள்ளது.
அதே பாணியை பின்பற்றி கூகுள் நிறுவனமும் இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்களை திறக்கிறது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த கடைகள் திறக்கப்படும் என சொல்லப்படுகிறது. 15,000 சதுர அடி பரப்பளவில் இதற்கான இடத்தை கூகுள் நிறுவனம் குத்தகைக்கு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி, மும்பையை தொடர்ந்து பெங்களூரிலும் நேரடி விற்பனை நிலையத்தை திறப்பதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கூகுள் நிறுவனம் ஈ காமர்ஸ் தளங்கள் மற்றும் குறிப்பிட்ட சில கடைகள் மூலம் இந்தியாவில் தங்களுடைய பிக்சல் போன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை விற்பனை செய்கிறது. கூகுள் நிறுவனம் இந்தியாவிலேயே தங்களுடைய பிக்சல் ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்யவும் தொடங்கியிருக்கிறது என்பதால் இந்திய சந்தையை கைப்பற்றுவதற்கு இந்தியாவிலேயே நேரடி விற்பனை நிலையத்தை தொடங்குவது தான் சிறந்ததாக இருக்கும் என கூகுள் தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது 712 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இருக்கின்றனர், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவை தங்கள் வளர்ச்சிக்கான முக்கிய சந்தையாக பார்க்கின்றன.
Story written by: Devika