ARTICLE AD BOX
2021 டி20 உலகக்கோப்பையில் விளையாடிய இந்திய அணி, முதலிரண்டு லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்பட்ட தோல்விக்கு பிறகு லீக் சுற்றோடு உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது.
இதில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்தது. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்த முதல் நிகழ்வாக அது பதிவுசெய்யப்பட்டது.
தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தியால் இந்திய அணிக்காக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. அதில் ஒரு போட்டி ஸ்காட்லாந்து எதிராக நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் வருண் சக்கரவர்த்திக்கு ரசிகர்களிடமிருந்து மிரட்டல் அழைப்புகள் வந்ததாக சமீபத்திய யூடியூப் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் அழைப்புகள் வந்தது..
நடந்துமுடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியில் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் வருண் சக்கரவர்த்தி. 2021 டி20 உலகக்கோப்பையில் துபாயில் நடந்த போட்டிகளில் சோக முகத்துடன் வெளியேறியவர், மீண்டும் அதே இடத்தில் தன் திறமையை கொண்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றார்.
இந்த சூழலில் 2021 டி20 உலகக்கோப்பை தோல்வியின் போது ரசிகர்களிடமிருந்து எவ்வளவு எதிர்வினைகளை எதிர்கொண்டேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
கோபிநாத் உடனான சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் அவர், “2021 டி20 உலகக்கோப்பை என்னுடைய இருண்ட காலம். என்ன டா ரொம்ப நம்பிக்கை வச்சு அணிக்குள்ள எடுத்துட்டு போனாங்க, ஒரு விக்கெட்ட கூட நம்மால எடுக்க முடியலையேனு ரொம்ப மன அழுத்தத்துல இருந்தேன். அதற்கு அப்புறம் 3 வருசத்துக்கு என்னை அணில எடுக்கவே இல்ல. முதல்ல அணில வாய்ப்பு கிடைக்குறத விட, திரும்ப கம்பேக் கொடுக்க நான் ரொம்ப கஷ்டபட்டன். திரும்பவும் டீம்ல எடுப்பாங்களா? மாட்டாங்களா? எதுவுமே தெரியாம என்னுடைய தினசரி வேலைகள இரட்டிப்பா மாத்தி கடினமா உழைச்சன்.
2021 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல் அழைப்புகள் வந்தது. இந்தியா வந்துடாத, மீறி வந்தா உன்னால வெளிய வர முடியாதுனு மிரட்டுனாங்க. விமான நிலையத்திலிருந்து வீடுவரைக்கும் பின் தொடர்ந்துலாம் வந்துருக்காங்க, பயந்து ஒளியுற நிலைமைக்குலாம் நான் போயிருக்கேன். ரசிகர்களோட உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுது, அப்போ எவ்வளவு வெறுத்தாங்களோ இப்போ அவ்வளவு வாழ்த்துறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று பேசியுள்ளார்.