ARTICLE AD BOX
அமீரக பூமியான துபாயில் இன்று கிரிக்கெட் அனல் பறக்கப் போகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை உலககெங்கும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட், 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி-20 போட்டி.... இப்படி முதன்முதலாக பாகிஸ்தானை எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே சத்தான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. ஆனால், வரலாறு அத்தனை எளிதானல்ல... வெற்றிகள் பட்டியலில் பாகிஸ்தானின் முன்னணியை மறுத்துவிட முடியாது.
இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ள 135 ஒருநாள் போட்டிகளில் 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. 57 போட்டிகளில் இந்திய அணி வெற்றியை சுவைத்திருக்கிறது. 5 போட்டிகள் வெற்றி-தோல்வியின்றி முடிந்துள்ளன. முந்தைய சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணியிடம்தான் இந்திய அணி இழந்திருக்கிறது. இப்போது பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான போட்டி என்பதை தவிர பெரிய நெருக்கடியில்லை. வென்றுவிட்டால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பாகிஸ்தான் அணிக்கு அப்படியல்ல... ஏற்கெனவே நியூசிலாந்து அணியுடனான முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டிருக்கிறது. இப்போது செய் அல்லது செத்துமடி என்கிற நிலை ரிஸ்வான் அணிக்கு.