ARTICLE AD BOX
ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது நடப்பாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.
ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா vs வங்கதேசம் மோதல்கள் விவரம்..
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 41 முறை ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு விளையாடியுள்ளன. இதில் இந்தியா 32 முறையும், வங்கதேசம் 8 முறையும் வெற்றிகளை பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது.
ஐசிசி தொடரை பொறுத்தவரையில் 2007 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரையில் இரண்டு அணிகளும் 2017 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டியில் மட்டுமே மோதியுள்ளன. அதில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 264 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 70 ரன்கள், முஸ்ஃபிகூர் ரஹிம் 61 ரன்கள் அடித்தனர். இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. ரோகித் சர்மா 123 ரன்களும், விராட் கோலி 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கவனிக்கப்பட வேண்டிய ஸ்டேட்ஸ்:
41 ODI மோதல்களில், 32 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, 8ல் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது.
டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 4 ஆட்டத்திலும், வங்கதேசம் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வங்காளதேசத்திற்கு எதிராக இந்தியா ஒரு சிறந்த சாதனையை படைத்துள்ளது, 2018 ஆசிய கோப்பையின் போது அங்கு நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில், மூன்றில் பங்களாதேஷ் வெற்றி பெற்றுள்ளது.