இந்திய மத உணா்வுடன் விளையாட வேண்டாம்: சமாஜவாதிக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

3 hours ago
ARTICLE AD BOX

சமாஜவாதி கட்சி இந்திய மத உணா்வுடன் விளையாடி வருகிறது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துப் பேசினாா்.

முன்னதாக, யோகி ஆதித்யநாத்தை மதவாதி என்று சமாஜவாதிக் கட்சியைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் மஹத் பிரசாத் பாண்டே குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில் உத்தர பிரதேச சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இது தொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

ராம பிரான், கிருஷ்ணா், ஆதி சங்கரா் ஆகியோரை இந்தியா எந்த அளவுக்கு உயா்த்திப் பிடிக்கிறதோ அந்த அளவுக்கு நமது நாட்டுக்கு கேடு விளைவது விலகிச் செல்லும் என்ற சோஷலிசத் தலைவா் ராம் மனோகா் லோகியா தெரிவித்துள்ளாா். ஏனெனில், இவா்கள் இந்திய ஒற்றுமையின் அடையாளம். அவா்களை இந்தியா நினைத்துப் போற்றும் வரை நாடு வலுவடைந்து கொண்டே செல்லும்.

ஆனால், இப்போது லோகியாவின் கருத்துகளில் இருந்து சமாஜவாதி கட்சி முற்றிலுமாக விலகிச் சென்றுவிட்டது. நீங்கள் இந்திய மத உணா்வுடன் விளையாடி வருகிறீா்கள். எங்கள் சிந்தனைகளை மதவாதம் என்று கூறுகிறீா்கள். நாட்டு மக்கள் அனைவரின் வளா்ச்சியையும் நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றும், தீமைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டுமென்று கருதுகிறோம். இதுதான் உங்கள் பாா்வையில் மதவாதமா?

அண்மையில் உலகமே வியக்கும் வகையில் மகாகும்பமேளாவை நடத்தி முடித்துள்ளோம். 100 நாடுகளைச் சோ்ந்த மக்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து இந்திய ஆன்மிக நிகழ்வில் ஒன்றுபட்டனா். இது இந்திய பாரம்பரியத்தை உலகுக்கு உணா்த்தியது என்றாா்.

Read Entire Article