ARTICLE AD BOX
ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் நிகழவிருக்கும் திரைவிழாவில் மணிரத்னத்தின் ‘இருவர்’ உள்பட 12 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்திய திரைப்படங்களுக்கான திரைவிழாவை முதன்முறையாக ஒருங்கிணைக்கிறது.
ஆஸ்கர் திரைப்பட விருது விழா மார்ச் 2 அன்று நடைபெறவுள்ளது. இதற்குப் பின் மார்ச் 8 முதல் ஏப்ரல் 20 வரை முதல் முறையாக 12 இந்தியத் திரைப்படங்கள் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படவுள்ளன. திரையிடப்படும் 12 திரைப்படங்களை இயக்குநர் சிவேந்திர சிங் துர்காபூர் தேர்வுசெய்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த ‘இருவர்’ 1997இல் வெளியானது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பிற்காலத்தில் இவரும் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’இருவர்’ திரைப்படம், திராவிட இயக்கத் தலைவர்களை சித்தரித்த விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், இன்றுவரை தமிழ் சினிமாவின் கிளாசிக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
‘இருவர்’ தவிர இயக்குநர் சத்யஜித் ரேயின் ‘கஞ்சன்ஜங்கா’ , ஷ்யாம் பெனகலின் 'மந்தன்', மெஹ்பூப் கானின் 'மதர் இந்தியா’, ஜி.அரவிந்தன் இயக்கிய மலையாளப் படமான ’கும்மட்டி’ ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளன. ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே , தேவதாஸ், ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட புகழ்பெற்ற இந்திப் படங்களும் திரையிடப்படவுள்ளன. ‘இஷ்னாவ்’ என்ற மணிப்பூரி படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.