ARTICLE AD BOX
'இந்தி திணிப்பு' என்ற தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டு சரியா? ஓர் அலசல்

பட மூலாதாரம், DMK
மொழி மக்களை இணைக்கும் முக்கியமான பங்கை ஆற்றுகிறது. ஆனால் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே வார்த்தைப் போரை உருவாக்கும் ஒன்றாக மொழி பிரச்னை மீண்டும் உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தவில்லை. இது இந்தியை மூன்றாவது மொழியாக திணிக்கும் முயற்சி என்ற வாதத்தை தமிழ்நாடு அரசு முன்வைக்கிறது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாநிலப் பள்ளிகளில் ஏற்கனவே தமிழையும் ஆங்கிலத்தையும் கொண்ட இரு மொழிக் கொள்கை செயல்பாட்டில் உள்ளது என்று தெரிவிக்கிறது.
ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், வரும் மும்மொழிக் கொள்கை மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தோடு மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அந்த மூன்றாவது மொழி இந்தி தானா என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ்நாடு மும்மொழி கொள்கையை இந்தியை திணிக்கும் முயற்சியாகவே கருதுகிறது.
- தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா? 5 கேள்விகளும் பதில்களும்
- மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு
- இருமொழி கொள்கை முன்னேற தடையாக இருந்ததா? தமிழ், ஆங்கிலம் படித்து வாழ்வில் சாதித்தவர்கள் கூறுவது என்ன?
- தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு
- இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்றால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை தர இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு ஒரு மிரட்டலாக கருதுகிறது.
இந்த பிரச்னை மொழியைக் கடந்து வட இந்தியா - தென்னிந்தியா என்ற சிக்கலான அரசியல் பிரச்னையாக உருப்பெற்றுவிட்டது. இச்சூழலில், இப்பிரச்னை மேலும் தீவிரமடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மாநில-மத்திய அரசுகளின் உறவில் இந்த பிரச்னையை எப்படி காண வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
இது வெறும் அரசு சார்ந்த பிரச்னையா அல்லது மக்களின் நலன் சார்ந்தும் இருக்கிறதா?
உலகமயமான சூழலில், நம்முடைய தாய்மொழியோடு சேர்த்து மூன்றாவது ஒரு மொழியை நாம் கற்க வேண்டுமா? இந்திய கூட்டாட்சி அமைப்பிற்கு இந்தி மூன்றாவது மொழியாக தேவைப்படுகிறதா?
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரப் பகிர்வில் தென்னிந்தியா அதிக பாதிப்புகளை சந்திக்குமா?
பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்வான 'தி லென்ஸ்'-ல் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடக இயக்குநர் முகேஷ் ஷர்மா இந்த விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் ஓப்பன் லேர்னிங்கின் முன்னாள் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேஷ் குமார், அரசியல் நிபுணர் மணிஷா ப்ரியம் மற்றும் சென்னையைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ரங்கராஜன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், ANI
மொழியைக் கடந்தும் நீடிக்கும் சர்ச்சை
மத்திய - மாநில அரசுகளின் உறவில் கல்விக் கொள்கை மட்டுமே பிரச்னை இல்லை. சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
"மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படலாம். வட இந்தியாவில் உள்ள மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் தென்னிந்தியாவில் உள்ள மக்கள் தொகை குறைவு. எனவே தென்னிந்தியாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பினால் தென்னிந்தியாவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்தார்.
அரசியல் நிபுணரான மணிஷா ப்ரியம் இதுகுறித்து பேசும் போது, "மக்களின் வாழ்க்கையில் மொழி இன்றியமையாதது. இந்தி மட்டுமின்றி போஜ்பூரியிலும் மைத்திலி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மொழி பன்முகத்தன்மை என்பது இந்தியோடு நின்றுவிடவில்லை," என்றார்.
"இது வட இந்தியா, தென்னிந்தியாவின் அரசியல் மட்டுமில்ல. இது மிகவும் தீவிரமான அரசியல் என்று நான் கருதுகிறேன். நாம் மொழி, கல்வி, கொள்கை, பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் போராட்டம் மூலமே அடைந்துள்ளோம். அனைத்து அரசியலும் இந்தியாவின் லாப, நட்ட கணக்குகளுக்கான அரசியல் இல்லை. கல்வி என்பது நம் அன்பின் அரசியல்," என்று அவர் தெரிவித்தார்.
- டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் பற்றி புதின் மௌனம் - ரஷ்ய தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?5 மணி நேரங்களுக்கு முன்னர்
- இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்3 மணி நேரங்களுக்கு முன்னர்

பட மூலாதாரம், Getty Images
"மாநிலங்கள் இதை எவ்வாறு அணுகுகின்றன என்பது முக்கியம்"
டாக்டர் ராஜேஷ் குமார் மொழி விவகாரம் குறித்து பேசும் போது, "எப்போதெல்லாம் இந்தி மொழி குறித்தோ அல்லது மும்மொழிக் கொள்கை குறித்தோ மத்திய அரசு பேசுகிறதோ, அப்போதெல்லாம் அதனை மாநிலங்கள் எவ்வாறு பார்க்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இத்தகைய செயல்களை அவர்களின் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகவே கருதுவார்கள். இது மிகவும் பழைய சர்ச்சை ஆனாலும் மீண்டும் மீண்டும் பேசுபொருளாகிறது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் வகையில் இந்தியை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போதும் தென்னிந்தியாவில் இருந்த முக்கிய பெரிய தலைவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்," என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். ரங்கராஜன், "இந்திய அரசமைப்பின் படி ஒன்றியத்திற்கான அலுவல் மொழி இந்தி. யார் அதைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும், அதனை கற்றுக் கொள்ள இயலும். ஆனால் நீங்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக் கொண்டே தீர வேண்டும் என்றால் அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
1968-ஆம் ஆண்டு மும்மொழிக் கொள்கைக்கான சட்டம் வகுக்கப்பட்ட போது, தென்னிந்தியாவில் இருப்பவர்கள் இந்தியையும் வட இந்தியாவில் இருப்பவர்கள் தென்னிந்திய மொழிகளையும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் அது அவ்வாறுதான் நடந்தது?
வட இந்தியாவில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய தேசிய கல்விக் கொள்கையிலும் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் வகையில் இரண்டொரு பத்திகள் இடம் பெற்றிருந்தன அல்லது அதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக பிரபலப்படுத்த தேசிய கல்விக் கொள்கை முனைகிறது. ஆனால் நம்முடைய அன்றாட வாழ்வுக்கு அது அவ்வளவு பயனுள்ள மொழியாக இல்லை" என்றார்.
- உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்? 28 பிப்ரவரி 2025

பட மூலாதாரம், Getty Images
"இது வடக்கு - தெற்கு பிரச்னை மட்டுமல்ல"
இந்தியுடனான தமிழ்நாட்டின் பிரச்னை மிகவும் பழைய ஒன்று. மோதிலால் நேரு 1928-ஆம் ஆண்டு இந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டுவரும் திட்டத்தை முன்மொழிந்த போது தமிழ்நாட்டுத் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னரும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பிரச்னையாக மொழி இருந்து வருகிறது.
"இன்று நாம் தோல்வி அடையக்கூடிய பிரச்னைக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் எங்கேயோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. உங்கள் காதுகளில் நீங்கள் 'ஹெட்செட்டை' மாட்டி நீங்கள் ஸ்பானிய மொழியில் பேசினால் உங்களுக்கு இந்தியில் கேட்கப் போகிறது.
ஆங்கில உள்ளடக்கத்தை தமிழில் படிப்பதற்கான திரைகள் தற்போது சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு குறித்து மக்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் நாம் மொழிப் பிரச்னையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். மொழி, கலாசாரம், நல்லிணக்கம் ஆகியவற்றில் எது நம்மை முன்னோக்கி கொண்டு செல்லும் என்ற அடிப்படையை நாம் ஆராய வேண்டும்" என்று தெரிவித்தார் ராஜேஷ் குமார்.
ரங்கராஜன் இதுதொடர்பாக மேற்கொண்டு பேசிய போது, "இந்தியாவில் இந்தி பரவலாக பேசப்படுகிறது. மொழி ஒரு இணைப்புக் கருவியே. ஆனால் அறிவு என்பது முற்றிலும் வேறுபட்டது. ஒரு மொழியை அறிந்து கொள்வதும், ஒரு விசயத்தில் ஞானம் அடைவதும் இரு வேறு விஷயங்கள். ஆங்கிலமாக இருந்தாலும் சரி, தமிழ், தெலுங்கு, இந்தியாக இருந்தாலும் சரி இவை அனைத்தும் கல்வியை கற்பதற்கான வழி தான்.
நீங்கள் ஏ.எஸ்.இ.ஆர்.(ASER) அறிக்கையை எடுத்துக் கொண்டால், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 60%-க்கும் மேலான குழந்தைகளால் அவர்களின் தாய்மொழியில் உள்ள இரண்டாம் வகுப்பு புத்தகங்களை படிக்க சிரமப்படுகின்றனர். தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் தான் நம்முடைய கவனம் இருக்க வேண்டும்," என்றார்.
தொகுதி மறுசீரமைப்பால் என்ன பிரச்னை?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசிய போது ரங்கராஜன், "இது வடக்கு - தெற்கு பிரச்னை இல்லை. பஞ்சாப், இமாச்சல், உத்தராகண்ட், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னை. தொகுதி மறுசீரமைப்பினால் இந்த மாநிலங்கள் தங்களது தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கலாம்.
தற்போது உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையானது 23- 24 கோடியாக உள்ளது. அங்கே 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதாவது, அங்கிருந்து மக்களவைக்கு தேர்வாகும் ஒரு உறுப்பினர் 30 லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையானது 8 கோடி. மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மக்களவைத் தொகுதி உறுப்பினரும் தோராயமாக 20 லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மணிஷா ப்ரியம் பேசும் போது, "தற்போது நாம் லாப நட்ட அரசியல் பக்கம் வந்துவிட்டோம். தொகுதி மறுசீரமைப்பு என்பது இதில் தான் வருகிறது.
தென்னிந்தியாவில் 90-கள் வரை ஆந்திர பிரதேசத்தின் எழுத்தறிவு விகிதமானது தேசிய சராசரிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் அதன் எழுத்தறிவு விகிதத்தை தேசிய சராசரிக்கும் அதிகமாகவே வைத்திருந்தன. அங்குள்ள மாணவர்களுக்கு அவர்களின் தாய் மொழியிலேயே பாடம் கற்பிக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.
இந்த மாநிலங்களில் கேரளா மட்டுமே சர்வதேச எழுத்தறிவு விகிதத்திற்கு மிகவும் நெருக்கமாக வந்துள்ளது. சீனா மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும் அளவுக்கு உள்ளது. பிஹார் ஆப்ரிக்காவுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
"இந்தியா எழுத்தறிவு மற்றும் அதன் வேகம் குறித்து இந்த மாநிலங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்," என்று கூறினார் அவர்.
"பிஹார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்பதை யார் தடுத்து நிறுத்தியது? இத்தனைக்கும் இந்த மாநிலங்களில் அவர்களுக்கு தேவையான மொழியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்தனர். மும்மொழிக் கொள்கையால் எந்த பாதிப்பும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு தேவையான வளங்கள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களிடம் யாராவது அவர்களுக்கு என்ன பிரச்னையென்று கேட்க முடியுமா?"
"பெண்களின் கல்வி குறித்து பேச வேண்டும் என்றால், 2005-ஆம் ஆண்டில் நிதிஷ் குமார் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மிதிவண்டிகளை வழங்கினார்"
"தென்னிந்தியாவைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். ஆனால் இத்தனை மேம்பாட்டுக்குப் பிறகும், நீங்கள் எங்களிடம் வந்து தென்னிந்தியர்கள் மொழி விவகாரத்தில் அரசியல் செய்கிறார்களா இல்லையா என்று கேள்வி எழுப்புவீர்கள்" என்று மணிஷா ப்ரியம் தெரிவித்தார்.
"வளர்ச்சி, கொள்கை செயலாக்கம் என்று வரும் போது மிகவும் மெதுவாக இயங்குவோம். ஆனால் அரசியல் என்று வரும் போது நமக்கு இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை உபயோகிப்போம். லாப, நட்ட அரசியலைக் கடந்தது இந்த விவாதம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் ராஜேஷ் இதுகுறித்து பேசும் போது, "இந்தி தேசிய மொழியாக இந்தியா சுதந்திரம் அடைந்த போது அறிவிக்கப்பட்டிருந்தால் அதனை மக்கள் அப்போதே ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதனோடு அரசின் பணியும் முடிந்தது.
இது மொழிக்கான பிரச்னை இல்லை. இதற்கான எளிமையான தீர்வு என்பது மாணவர்களை சுதந்திரமாக விடுவது. அவர்களுக்கு தேவையானதை தேர்வு செய்ய சுதந்திரம் அளிப்பது. 6-ஆம் வகுப்பிலோ, 9-ஆம் வகுப்பிலோ அல்லது அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவர்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளட்டும். இந்த விவகாரத்திற்கான தீர்வை இப்படித்தான் காண வேண்டும்," என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)