ARTICLE AD BOX
இந்த வார ராசி பலன் : பிப்ரவரி 28 2025 முதல் மார்ச் 6 2025 வரை
சென்னை: மார்ச் மாத முதலாம் வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் கும்ப ராசியில் இருக்கிறார். செவ்வாய் வக்ரகதியில் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 24 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் மீன ராசியில் இருக்கிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் மீன ராசியில் நிற்கிறார். 1 ஆம் தேதி வக்கிரகதி அடைகிறார். சனி பகவான் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் கிரகங்களில் மாற்றம் இல்லை.
சந்திரன் இந்த வாரம் கும்பம் மீனம் மேஷம் ரிஷபம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார்.
கடகம் சிம்மம் கன்னி துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்
சூரியன் - கும்ப ராசி
செவ்வாய் - மிதுன ராசி
புதன் - மீனம் ராசி
குரு - ரிஷப ராசி
சுக்கிரன் - மீன ராசி
சனி - கும்ப ராசி
ராகு - மீன ராசி
கேது - கன்னி ராசி

மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தைரியமாக எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு அதிக அலைச்சல் உண்டாகும். சந்திரனின் சஞ்சாரங்கள் புதிய முதலீடுகளை செய்ய வைக்கும். செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர் வகையில் செலவு அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவது குடும்பத்தில் சிக்கல் வராமல் காப்பாற்றும். புதன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். குரு பகவான் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிர்பார்த்த காரியம் நடக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்கள் செல்வீர்கள். சுக்கிரன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். காதலர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்வார்கள். திருமண காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். சனி பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் நிதானமாக நடக்கும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அதிக லாபத்தை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு நிலையான வருமானம் பெறுவீர்கள். ராகு 12 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பணத்தை எப்படி சிக்கனமாக செலவு செய்கிறீர்களோ... அதைப்போல வார்த்தைகளையும் சிக்கனமாக செலவு செய்யுங்கள். கேது 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்வீர்கள். நண்பர்கள் மூலமாக தொந்தரவு ஏற்படலாம்.

ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். நீங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சந்திர பகவானின் சஞ்சாரம் தொழிலில் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வரும். செவ்வாய் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பீர்கள். கவலையால் உடல் நலம் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வீண் அழைச்சலையும் பணச் செலவையும் வெளியூர்ப் பயணங்கள் ஏற்படுத்தும். குருபகவான் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். ஊக்கத்துடன் வியாபாரத்தைக் கவனிப்பீர்கள். கமிஷன் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். மணமேடை ஏறுவதற்காக காத்திருக்கும் இளம் வயதினருக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சனி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். கட்டுமான தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ராகு 11ஆம் வீட்டில் இருக்கிறார். வேலையாட்களை பொறுமையுடன் அணுக வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானம் ஏற்படும். தொழில் துறை சீராக இருக்கும். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அசாத்திய துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு ஊக்கத்தைக் கொடுக்கும்.
23,24 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். உங்களைப் பற்றி யார் என்ன குறை கூறினாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை. செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். இவரின் அனுக்கிரகத்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். புதன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியூர் பயணங்கள் அலைச்சலை மட்டுமே கொண்டு வரும். பெண்களால் பணவிரயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. குரு பகவான் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மேலதிகாரிகளின் டார்ச்சர் அதிகரிக்கும். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். தொழில்துறையில் நல்ல ஆதாயம் கிடைக்கும் நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். கடன் வாங்கி கடன் கொடுக்காதீர்கள். ஏதாவது ஒரு மனச்சுமை அழுத்திக் கொண்டே இருக்கும். ராகு 10 ஆம் வீட்டில் இருக்கிறார். செய்யும் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தினால் ஆதாயம் அதிகரிக்கும். கேது 4 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய மனிதர்களின் சந்திப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும்.

கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
சூரிய பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். எதற்கெடுத்தாலும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். நல்ல மனிதர்களை விரோதிக்கும் நிலை உருவாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் பிடிவாதமாக இருங்கள். சந்திரன் சஞ்சாரம் சாதக பாதகமாக இருக்கிறது. வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். தொழிலிருந்த போட்டிகள் விலகும். வங்கியில் கையிருப்பு அதிகரிக்கும். விரோதிகள் விலகி ஓடுவார்கள். புதன் 9 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் தீய காரியங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். அதிலிருந்து மீண்டு வருவீர்கள். குடும்பத்தில் புதிய ஜீவன் தோன்றும். மேலதிகாரிகளின் தொந்தரவு சிரமத்தை கொடுக்கும். குரு 11 ஆம் வீட்டில் இருக்கிறார். மணமாகவில்லையே என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். கடன் தொல்லைகள் காணாமல் போகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்பு பெற்று வருமானத்தை அதிகரிப்பீர்கள். சனி பகவான் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளி வட்டார செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீட்டிற்கு குடி செல்வீர்கள். ராகு 9 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசியல்வாதிகளின் பழக்கம் அனுகூலத்தை கொடுக்கும். அரசுத் துறையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் சிறப்பான பலனை கொண்டு வரும். கேது 3 ஆம் வீட்டில் இருக்கிறார். கணவன் மனைவி உறவு கசப்புடன் திகழும். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுத்து கசப்பை இனிப்பாக மாற்றுவீர்கள்.
28,1 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.

சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்கள் ராசிநாதன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏண்டா திருமணம் செய்தோம் என்ற நிலைக்கு ஆளாவீர்கள். விட்ட குறை தொட்ட குறையாக வீண் வம்புகள் வீடு வரைக்கும் வரும். சந்திரனின் நகர்வுகள் சாதகமாக இருப்பதால் நெஞ்சில் இருந்த வேதனை விலகி மன நிம்மதி கிடைக்கும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட நாள் ஆசைப்பட்ட நகையை வாங்கி மனைவிக்கு கொடுப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடந்து கையிருப்பை அதிகரிப்பீர்கள். புதன் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்லைன் வியாபாரங்களில் அதிக நாட்டம் கொள்ளாதீர்கள். நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு தாமதமாக கிடைக்கும். உடல் நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். குரு பகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு இடம் மாறி செல்லக்கூடிய நிலை உருவாகும். சுக்கிரன் 8ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள். சனி பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். ராகு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். அக்கறையுடன் அரசு வேலைகளை பாருங்கள். மேலதிகாரிகள் அனுசரணையாக இருக்க மாட்டார்கள். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும்.
2,3 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சூரியன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். புதிய தொழிலுக்கான முயற்சிகளை செய்வீர்கள். தெய்வ பக்தி அதிகரித்து ஆலயங்களுக்கு செல்வீர்கள். சந்திரனின் சஞ்சாரம் ஏற்றம் இறக்கமான பலன்களை தரும். வியூகம் அமைத்து வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். வயது குறைந்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். அசிங்கப்படுவதும் அவமானப்படுவதும் தவிர்க்க முடியாது. புதன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசு வேலையில் பதவி உயர்வு பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குரு 9 ஆம் வீட்டில் இருக்கிறார். இழுபறியாக இருந்த அரசாங்க வேலை உடனே முடியும். வீட்டில் குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். சுக்கிரன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். முடியாத காரியத்தை பிடிவாத குணத்தால் சாதிப்பீர்கள். சனி பகவான் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் சிறு சிறு தகராறுகள் மன நிம்மதியைக் கெடுக்கும். அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குவீர்கள். ராகு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். தீயவர்கள் நட்பை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள். பெண்களால் சில அவமானங்களை சந்திப்பீர்கள். கேது 1 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆடம்பர செலவுகளால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். புதிய நண்பர்களை நம்பி மோசம் போகாதீர்கள்.
3,4,5 ஆம் தேதி சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். சகோதரருக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். தொழில் போட்டியாளர்களை வெற்றிகொள்வீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். சந்திரனின் நகர்வுகள் சாதக பாதகங்களை ஏற்படுத்தும். செவ்வாய் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். நல்ல நண்பர்கள் கூட ஏட்டிக்கு போட்டியாக நடப்பார்கள். ஏதோ ஒரு வகையில் மன நிம்மதிக்கு பங்கம் உண்டாகும். புதன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். பொருள் வரவு அதிகரிக்கும். புத்தாடை வாங்குவீர்கள். கமிஷன் வியாபாரம் கண ஜோராக நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக நன்மையை தரும். குரு பகவான் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவி மக்கள் மனதை புரிந்து கொண்டு நடப்பார்கள். சுக்கிரன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். பொதுச் சேவையில் ஈடுபட்டு செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். மற்றவர்கள் பாராட்டுவார்கள். சனி பகவான் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகள் நடத்தயை அணுக்கமாக கண்காணியுங்கள். ஏதாவது ஒரு பிரச்சனையில் உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். எதற்கெடுத்தாலும் இரண்டு மடங்கு செலவு செய்வீர்கள். எச்சரிக்கையோடு இருந்து பண இழப்பை தடுத்துக் கொள்ளுங்கள். கேது 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். விபத்துக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
5,6 ஆம் தேதி சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.

விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எவ்வளவுதான் உதவி செய்தாலும் உறவினர்கள் வெறுப்பைத்தான் உமிழ்வார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தக்க சமயத்தில் அவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சந்திர பகவானின் அனுக்கிரகம் வியாபார வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். விரோதிகள் கூட உங்களின் வெள்ளை சிரிப்பில் நண்பர்களாக மாறுவார்கள். வீடு கட்ட மனை வாங்குவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவிக்கு தேவையான பொன் நகைகளை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பீர்கள். புதன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். தடைபட்ட காரியங்கள் இடையூறின்றி நடக்கும். லாட்டரி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டு பயணம் செல்வீர்கள். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். விவசாயத் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். வெறுப்போடு செய்கின்ற காரியங்கள் சிறப்போடு நடந்தேறும். சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். மாணவர்கள் மேல் படிப்புக்காக கல்லூரியில் சேர்வார்கள். அனாவசிய செலவுகள் குறைந்து கையிருப்பு கூடும். ராகு 5 ஆம் வீட்டில் இருக்கிறார். பெரிய மனிதர்கள் ஆதரவால் புதிய தொழிலில் இறங்குவீர்கள். கேது 11 ஆம் வீட்டில் இருக்கிறார். உரிய நேரத்தில் சாப்பிட முடியாத அளவிற்கு வேலைப்பளு அதிகரித்து அவதிப்படுவீர்கள்.

தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருக்கிறார்.
தேவையில்லாத தொல்லைகளை தவிர்க்க புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். மனதில் ஏதாவது ஒரு பயம் பாடாய்ப்படுத்தும். பணத்தட்டுப்பாடும் கவலையை ஏற்படுத்தும். சந்திரனின் நகர்வுகள் சில நல்ல காரியங்களை நடத்தும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். தூரத்து உறவுகளில் வருந்தத்தக்க நிகழ்ச்சி ஏற்படலாம். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீண் பிடிவாதம் வீட்டில் பூகம்பத்தை உண்டாக்கும். புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். வழக்குகள் சாதகமாக முடியும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். வெளியூர் பிரயாணங்கள் வெற்றிகரமாக அமையும். குரு பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். உடல் நிலையில் சில சிக்கல்கள் உருவாகலாம். மேலதிகாரிகளின் சீற்றம் மனதை வாட்டும். செய்கின்ற தொழிலில் நிலையான வருமானம் கிடைக்க பாடுபடுவீர்கள். சுக்கிரன் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆத்திரப்பட்டு காரியத்தை கெடுக்காதீர்கள். வருகின்ற வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். சனிபகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். வீட்டில் மங்களகரமான சம்பவங்கள் நடக்கும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவிக்கோ கணவருக்கோ உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீர்கள். கேது 10 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை இடத்தில் புகழும் பாராட்டும் கிடைக்கும்.

மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி வீட்டாரால் செலவுகள் ஏற்படும். கடுமையாக உழைப்பீர்கள். குறைவான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களை கொஞ்சம் தள்ளி வைக்கலாம். வீண் வம்புகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்திரனின் நகர்வுகள் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலையில் உற்சாகம் இருக்காது. விரோதிகள் உங்களை அழிக்க முயற்சி செய்வார்கள். மேலதிகாரிகளிடம் சண்டை போடாதீர்கள். புதன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்த காரியமாக இருந்தாலும் பொறுமையுடன் நடந்து கொண்டால் வரவிருக்கும் தீமைகளை அகற்றலாம். குரு 5 ஆம் வீட்டில் இருக்கிறார். பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் போகும். வியாபாரம் சுமாராக நடக்கும். வேலை இடத்தில் கெட்ட பெயர் உண்டாகலாம். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட கால கடனை இப்போது கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். சனி 2 ஆம் வீட்டில் இருக்கிறார். பெரிய இழப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆன்லைன் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ராகு 3 ஆம் வீட்டில் இருக்கிறார். குலதெய்வம் கோயிலுக்கு செல்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கேது 9 ஆம் வீட்டில் இருக்கிறார். இழுபறியாக இருந்த சில காரியங்கள் இந்த காலகட்டத்தில் நடந்தேறும்.

கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் 1 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த வாரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல விதமாக நடந்து கொள்வார்கள். விரோதிகள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். மறைமுகமான எதிர்ப்பு மறைந்து போகும். உலவுகின்ற நிலவு உற்சாகத்தை கொடுக்கும். செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியிடங்களில் ஆடம்பரமாக விருந்துக்குச் செல்வீர்கள். வீட்டில் மங்கல நிகழ்சிகளை நடத்துவீர்கள். புதன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். சொத்து சுகம் சேரும். திருமண வாய்ப்பு கை கூடி வரும். குரு 4 ஆம் வீட்டில் இருக்கிறார். விரோதிகள் செய்யும் சூழ்ச்சிகள் பயனற்று போகும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நடக்கும். சுக்கிரன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். பிறர் தயவை நாடிய நிலை போய் மற்றவருக்கு உதவி செய்வீர்கள். சனி பகவான் 1ஆம் வீட்டில் இருக்கிறார். தரம் அறிந்து உறவு வைத்துக் கொள்ளுங்கள். கெட்ட பெயரை சம்பாதித்து அவமானப்படாதீர்கள். ராகு 2 ஆம் வீட்டில் இருக்கிறார். சகோதரர்களால் தொல்லை வந்து சேரும். கூடவே பொருள் இழப்பும் உண்டாகும். கேது 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள்.

மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரியன் 12 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெளியில் தொல்லைகளை சந்திப்பீர்கள். ஆனால் வீட்டில் உங்கள் மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்கள். தேவையில்லாத செலவுகளை ஒதுக்குங்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துங்கள். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். அடுத்தவர் விஷயங்களில் அனாவசியமாக தலையை நுழைக்காதீர்கள். கமிஷன் தொழில் சுமாராக நடக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். போட்டி பந்தயங்கள் சாதகமாக இல்லை. புதன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளுக்கான கல்வி செலவு அதிகரிக்கும். பணி மாறுதலாகி வெளியூர் செல்வீர்கள். குரு பகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். செய்தொழில் சிறிய தடங்கல் உண்டாகும். கடுமையாக உழைத்து கடன்களை அடைப்பீர்கள். சுக்கிரன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு கட்ட நிலம் வாங்குவீர்கள். ராகு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். அரிய காரியங்கள் செய்து புகழையும் செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்வீர்கள். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியூர் பயணங்களில் பெரிய நன்மை கிடைக்காது. வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கும்.