ARTICLE AD BOX
இந்த பங்கா அந்த பங்கு!... சல்லி சல்லியாக நொறுங்கிய மெஹாய் டெக்னாலஜி பங்கு விலை..
11 மாதத்தில் 580 சதவீதம் லாபம் கொடுத்த ஒரு பங்கு கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர்ந்து லோயர் சர்க்கியூட் அடித்து வருகிறது. அந்த பங்கு மெஹாய் டெக்னாலஜி லிமிடெட். இ்ந்நிறுவனம் லைட்டிங் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எல்இடி பல்புகள், டியூப் லைட்ஸ் மற்றும் பவர் பேங்க்களையும் வழங்குகிறது. மேலும் மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் கிழக்கு இந்தியாவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சில்லறை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் தேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. இந்நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவைகளையும் வழங்குகிறது.
இந்நிறுவனம் பாட்னாவில் 16 எலக்ட்ரானிக்ஸ் சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இதுதவிர கொல்கத்தாவில் 4 புதிய கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.15.99 கோடியும், நிகர லாபமாக ரூ.66 லட்சமும் ஈட்டியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.45.73 கோடியும், நிகர லாபமாக ரூ.5.32 கோடியும் ஈட்டியுள்ளது. இது இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் வளர்ச்சி கண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.

2024 மார்ச் 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.18க்கு சென்றது. அதுமுதல் இதுவரையிலான 11 மாத காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை 581 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2025 ஜனவரி 13ம் தேதியன்று இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.340.10ஐ எட்டியது. ஆனால் ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை ராக்கெட் வேகத்தில் சரிவு கண்டு வருகிறது.
குறிப்பாக கடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தையில் மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் நிறுவன பங்கு விலை தொடர்ந்து லோயர் சர்க்கியூட் அடித்து வருகிறது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.122.65ஆக குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.129.10ஆக இருந்தது. இந்நிறுவனம் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது. இந்த பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.