ARTICLE AD BOX

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை திமுக சீரழித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகின்றது. பெண் குழந்தைகளுக்கு எதிராக பள்ளிகளில் நடைபெறக்கூடிய பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு திமுக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பிறகு குற்றவாளிகளை கைது செய்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு இந்த குற்றங்களை தடுக்கவும் பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த அமைப்புகளை கலைத்திருக்கிறது என்பதுதான் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறையில் அரசு பள்ளிகளில் மட்டுமே இது போன்ற பாலியல் குற்றங்களும் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் இதர பிரச்சனைகளும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதிலிருந்தே திமுக அரசும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களை கையாளும் விதம் நன்றாக தெரிகிறது. அரசு பள்ளிகளின் செயல்பாட்டை முடக்குவது தான் திமுகவின் நோக்கமாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சரை போலவே விளம்பர மோகத்தில் தெரிந்து கொண்டிருக்கின்றார். அமைச்சராக தொடர்ந்து நீடிக்க இவருக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.