ARTICLE AD BOX
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"இதே ஊர்ல தான் இருக்கோம், இன்னும் பக்கத்துல இருக்க கோவிலுக்கு போனதில்லை. வர வாரம் கண்டிப்பா போலாம்"
வேலை, வேலை என இத்தனை நாள்களாக இருந்த என் மாமனாரும் மாமியாரும் வெளியுலகைக் காண நினைக்கும் வயதில் எங்கள் வீட்டிற்கு வந்தது மகிழுந்து.
காரில் ஏறி செல்வது அவர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை தந்தது.
நால்வரும் ஒட்டுக்காக செல்ல முடியாமல் இருந்த இடங்களுக்கெல்லாம் இப்பொழுது சென்று வந்தோம்.
சில இடங்களுக்கு மதிய உணவு சமைத்து எடுத்துச் சென்றோம். போகும் வழியில் மர நிழலில் வண்டியை நிறுத்தி உண்டுவிட்டு பயணித்தோம்.
"இங்கிருந்து ஊட்டி கொடைக்கானல் நாலு அஞ்சு மணி நேரம் தான்.. பெங்களூரு பக்கம் தான்.. இல்லை கேரளா போய்ட்டு வரலாமா" என் கணவரும் ஆர்வத்துடன் திட்டமிட்டார்.
நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வந்தோம்.மகளை கூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றோம். மழையிலும் பனியிலும் வெயிலிலும் காரின் உள்ளே ஒளிந்தோம். அவ்வப்போது காரணமே இல்லாமல் வெகு தூர பயணம் சென்றோம்.
'வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம் நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே'
இரவு உலா.. மழையில் பாடல்கள் ஒலிக்க சென்ற அனுபவங்களை இணையத்தில் சிலாகித்து பிறர் பகிர்ந்து இருப்பதை பார்த்துள்ளேன்.

உண்மையிலேயே மழையின் பொழுது வெளியில் செல்வது சுகமாகத் தான் இருக்கின்றது.
'மின்னல்கள் கூத்தாடும் மழைகாலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ கோலம்'
ஏன் பாடல்களை பற்றி இவ்வளவு பேச வேண்டும்.. ஆனந்த ஹார்மோன்களை இன்னும் சுரக்க வைக்கின்றதே..
மகிழுந்து வாங்கிய படலம் - 1: மிடில் கிளாஸ் பெண்ணின் பகிர்வு | My Vikatanபாடல் ஒலிக்க ஆரம்பித்த முதல் நொடி இசையில் இருந்தே நரம்பெல்லாம் கூத்தாட தொடங்குகிறதே! அதுவும் மழையின் தூறல் காரின் கண்ணாடியின் மேல் விழும் சத்தம் மேலும் சிலிர்க்க வைக்கின்றது.
"நானும் கார் ஓட்ட கத்துக்கிறேன்" என்றேன் ஒரு காலை பொழுதில் நான்.
"கியர் மாத்தனும்.. சைடு பாத்து ஓட்டணும்.. உனக்கு கஷ்டமா இருக்கும்"
"பொண்ணுங்க விமானமே ஓட்றாங்க.. கார் ஓட்ட முடியாதா.. எல்லாம் கத்துப்பேன் சொல்லி குடுங்க"
"கத்துப்ப தான்.. நல்லா பழகணும் அதுக்கு"
"நான் நிறைய ப்ர்ராக்டீஸ் பண்ணிக்கிறேன்.. ஏன் பொண்ணுங்க ஓட்ட முடியாதுன்னு டீமோடிவேட் பண்றிங்க"
"ஐயோ நான் அப்படிலாம் சொல்லலையே.. அதுல இருக்க கஷ்டத்தை தான சொன்னேன்.. நீயும் ஓட்ட கத்துக்கிட்டா ஜாலி தான் நான் முன்னாடி ரிலாக்ஸா உட்கார்ந்துட்டு வருவேன்.. லாங்கா போனா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓட்டிக்கலாம்"
"சீக்கிரம் கத்துக்கிறேன்"
"ஏ.. பி.. சி"
"என்னது"
"அக்சிலரேட்டர்.. பிரேக்.. க்ளட்ச்.. ரைட்ல இருந்து இந்த ஆர்டர்ல தான் இருக்கும்"
"சரி.."
"சைடு மிர்ரர் கரெக்ட்டா வெச்சிக்கோ.. நம்ம கண்ணு அங்கயும் இருக்கனும்.. வண்டியோட மெசுர்மன்ட் முக்கியம்.. கவனமா ஓட்டணும்.. ஸ்டார்ட் பண்ணு இப்போ"
சாவியைத் திருப்பினேன்.. ஆன் ஆக வில்லை. முயற்சித்தும் முடியவில்லை. என் கணவர் ஆன் செய்து பார்த்தார் அப்பொழுதும் ஒன்றும் நிகழவில்லை. இரண்டு மூன்று முறை சாவியை கழட்டி போட்டுப் பார்த்தோம் முடியவில்லை.

"என்னாச்சுன்னு தெரியலையே.. வண்டி வேற இன்னும் சர்வீஸ் விடலை"
நண்பர்கள் மூலம் வண்டியை சரி பார்க்க ஒரு மெக்கானிக் வந்தார்.
"பேட்டரி போய்டுச்சு.. அத மாத்தணும்.. அப்போதான் ஸ்டார்ட் பண்ண முடியும்"
பழைய வண்டியை வாங்கி உள்ளோம். சிறு சிறு மாற்றங்கள் செய்து தானே ஆக வேண்டும்.
பேட்டரியை மாற்றி விட்டு ஒரு பொதுவான சர்விஸ் செய்தோம்.
வண்டிக்கான செலவுகள் அதிகமானது.
"இதுக்கு தேவை இருக்கும் போது கேப் புக் பண்ணி போயிருந்திருக்கலாம் போல.. கார் வாங்குனதுல இருந்து பயங்கரமா செலவு ஆகுது.. இதுல பார்க்கிங்க்கு வேற மாச மாசம் கொடுக்கணும்" என் கணவர் புலம்ப ஆரம்பித்தார்
"இனி செலவு கொஞ்சம் கொறச்சிட்டு சிக்கனமா செலவு பண்ணலாம்" திட்டமெல்லாம் நன்றாகத் தான் போட்டோம். ஆனால் செலவு குறைந்தபாடில்லை.
"மியூசிக் சிஸ்டம் வேற மாத்தலாமா.. இன்னும் தெளிவா கேக்கற மாதிரி"
"ரொம்ப நேரம் கார் ஓட்டுனா கால் வலிக்குது இப்போ எல்லாம் ஆட்டோமேட்டிக் கார் வந்துடுச்சி நம்ம கிளட்ச் மிதிக்கவே தேவையில்லை"
"முன்னாடி போற கார் என்னா மாதிரி போகும் தெரியுமா.. வீட்ல சோபால உட்கார்ர மாதிரி இருக்கும் குலுங்காது.. ரொம்ப பாதுகாப்பும்" என்றார் கணவர்.
நம்மிடம் ஒன்று இருந்தாலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று தேடிக் கொண்டே இருப்பது தான் மனமா!
எப்பொழுது நமக்கு இருப்பதே போதும் என்கிற திருப்தி கிடைத்து பொருட்களின் மீதுள்ள ஆசையை குறைப்போம்.
என்ன இருந்தாலும் கார் வந்தது எங்களுக்கு ராசி தான். அனுபவித்திடாத பல சந்தோசங்களை எனக்கு கொடுத்திருக்கிறது. அதே நேரம் வாழ்க்கையைப் பற்றிய பல புரிதல்களை உணர செய்தது.
"நாளைக்கு எல்லாரும் வெளிய போறோம்.. கோவிலுக்கு போய்ட்டு பூங்கா போறோம்.. வேன் பேசியிருக்கு.. நீங்க எப்படி வரீங்க.. கார்ல வரீங்களா.. பக்கம் தான்" என்று கேட்டார் குடும்பத்தோடு ஒரு நாள் சுற்றுலா திட்டமிட்ட அத்தை.
கார் வைத்திருப்பதில் இப்படி சில நேரங்களில் சங்கடமும் ஏற்படுகின்றதே..

"எனக்கும் எல்லார்கூடவும் வரணும்.. நான் வேணா வேன்ல வந்துக்குறேன்.. யாருக்காவது கார்ல போகணும்னா நீங்க கார்ல ஏறிக்கோங்க" என்றேன் சிரித்துக்கொண்டே.
சொந்தங்களுடன் செல்லும்பொழுது பயண நேரத்தில் தானே பேசிக் கொள்ள முடியும். இப்படி எல்லோருடனும் கூட்டமாக செல்வதும் மகிழ்ச்சி தானே. தேவைக்கு ஏற்ப எந்த வாகனத்தில் பயணிக்க வேண்டுமோ அதில் செல்ல வேண்டும்.
இன்னொரு நாள் மாலையில்..
"கொஞ்சம் ஓரமா நிறுத்தரிங்களா.. அந்த கடைக்கு போகணும்"
"கார் எங்க பார்க் பண்றது மறுபடியும் வந்து வாங்கிக்கோ" என்றார் கணவர். கார் பார்க்கிங் கடினமாகத் தான் உள்ளது. பேசாமல் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கலாமோ! ஒரு நல்லது இருந்தால் ஒரு கெட்டது இருக்கத்தான் செய்கின்றது இது தான் வாழ்வின் சமநிலையா!
பல சிந்தனைகளோடு வெளியில் பார்த்தேன். எங்களுக்கு அருகில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஜன்னல் ஓரத்தில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமர்ந்திருந்தாள் என் சம வயதுடைய பெண். அவள் கண்களில் இருந்த அமைதியை வியந்து பார்த்தேன் நான்!
-ரேவதி பாலாஜி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...