திருச்சி: அதுவும் வந்திடுச்சு... இதுவும் வரபோகுது. அதனால இப்ப இதுவும் வேணுங்க... திருச்சிக்கு கண்டிப்பாக இதுவும் வேணுங்க என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதை எதை தெரியுங்களா?

தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டமாக திருச்சி மாவட்டம் உள்ளது. திருச்சி மாவட்டம் வழியாக ஏராளமான பேருந்துகள் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த வண்ணம் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கியும் சென்னையில் இருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களை நோக்கியும் ஏராளமான பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி பஞ்சப்பூரில் போக்குவரத்து முனையம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக ஐடி நிறுவனமும் கட்டப்படுகிறது. இப்படி முக்கியமான வர்த்தக நிறுவனமாக திருச்சியின் நிறம் மாறிக் கொண்டு இருக்கிறது. இதில் இப்போ திருச்சியில் போக்குவரத்து கோட்டம் வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்து கோட்டம் இருந்தது. ஆனால் மாவட்ட வாரியாக போக்குவரத்து கோட்டங்கள் பிரித்தபோது திருச்சி மாவட்டத்திற்கு பதிலாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனியாக போக்குவரத்து கோட்டம் அமைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய கோட்டமாக விளங்கும் கும்பகோணத்தில் சில மாவட்டங்களை பிரித்து திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டும் என திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்களின் கோரிக்கை இப்படி இருக்க சமீபத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும், திருச்சிக்கு என்று தனியாக போக்குவரத்து கோட்டம் உருவாக்கப்படும் என தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு போக்குவரத்துக்கு கோட்டம் உருவாக்கினால் புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்கள் கிடைக்கும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்பகுதிகளும் தொழில்களால் வளர்ச்சியடையும், மக்களின் வாழ்க்கை தரமும் உயரும். புதிய நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்தால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். தற்போது இருக்கக்கூடிய கும்பகோணம் கோட்டம் பெரிய கோட்டமாக இருப்பதால் அதனை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பிலும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் திருச்சி மாவட்டத்திற்கு என்று தனியாக போக்குவரத்து கோட்டம் உருவாக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? பல்வேறு வகையிலும் திருச்சி மாவட்டம் முன்னேறும் நிலையில் இதுவும் சாத்தியம் ஆகுமா? ஆக வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், திருச்சிராப்பள்ளி கோட்டம் உருவாக்கி அதன் கீழ் திருச்சியில் இருந்து பிரிந்து சென்ற புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை இணைத்து திருச்சியில் தரமான பேருந்துகள் ஓடுவதை உறுதி செய்ய வேண்டும். கும்பகோணம் கோட்டம் திருச்சிக்கு போதுமான பேருந்துகளை ஒதுக்குவதில்லை. மேலும் திருச்சி மாநகரக்குள் தரம் இல்லாத பழைய பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன, இந்த நிலை மாற திருச்சிக்கென ஒரு கோட்டம் அவசியம். இதனால் புதிய வழிதடங்கள் கிடைக்கும். திருச்சியில் இன்னும் 30, 40 வருடங்களுக்கு முன்பு இருந்த வழிதடங்கல்களில்தான் பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே திருச்சிக்கு தனியாக ஒரு போக்குவரத்து கோட்டம் அவசியம் தேவை. இவ்வாறு தெரிவித்தனர்.