ARTICLE AD BOX

மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததை கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இதுதான் உங்கள் போலி திராவிட மாடல் அரசியல் லட்சணமா? போலி சமூக நீதியின் லட்சணமா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமத்தில் மணி என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடலை எடுத்து செல்ல போதிய சாலை போக்குவரத்து வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்து கிராம இளைஞர்களின் உதவியோடு இறந்தவரின் உடல் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தோளில் சுமந்து கொண்டு செல்லப்பட்ட அவல நிலை வருத்தம் அளிக்கிறது.
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பதாக பெருமிதம் அடைந்து கொள்ளும் போலி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இதுபோன்ற மலைக் கிராமங்களில் வசிக்கின்ற மக்களிடம் வாக்கு சேகரிக்க மட்டும் தான் இத்தனை ஆண்டு காலமாக சென்று வந்திருக்கிறீர்கள் என்பது இதன் மூலமாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மத்திய அரசை கண்டிக்கிற பேர்வழி, நேற்றிலிருந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் ரயில் நிலையங்களிலும் இந்தி எழுத்துக்களை அளிப்பதில் மும்முரம் காட்டி வருகின்ற ஆளும் கட்சியானது அடிப்படை சாலை வசதி இல்லாமல் தவித்து வருகின்ற மலை கிராம மக்களின் அவல நிலை குறித்து எள்ளளவும் கவலையில்லாமல் இருந்து வருகின்றது. இது வாக்களித்த மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் என்று திமுக அரசை எல்.முருகன் விமர்சித்துள்ளார்.