ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அடுத்து விளையாட உள்ள போட்டி மார்ச் 2-ம் தேதிதான் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணியுடன் பிப்ரவரி 23-ம் தேதி விளையாடிய இந்திய அணி, அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு முன் ஏழு நாட்கள் ஓய்வு பெற்று இருக்கிறது.
வேறு எந்த அணிக்கும் இது போன்ற சாதகமான சூழ்நிலை அமையவில்லை. இது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் புயலைக் கிளப்பி உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்ற ஏழு அணிகளும் பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்கள் மற்றும் துபாய் என நான்கு மைதானங்களில் தங்களின் போட்டிகளை மாற்றி, மாற்றி விளையாட உள்ளன.

ஆனால், இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் துபாயில் மட்டுமே நடைபெற உள்ளன. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெற்றால், அந்த போட்டிகளும் துபாயில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு சாதகமான அம்சம் இந்திய அணிக்கு எதிராக இருக்கும் நிலையில், அட்டவணையிலும் ஏழு நாள் இடைவெளி இருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
ஆனால், இதன் பின்னணியில் மிகப்பெரிய வியாபாரமும் உள்ளது. உலகக்கோப்பையோ அல்லது சாம்பியன்ஸ் டிராபியோ, எந்த ஒரு பெரிய கிரிக்கெட் தொடராக இருந்தாலும், அதில் கிடைக்கும் வருவாயில் பெரும்பாலான சதவீதம் இந்தியாவைச் சார்ந்தே அமைந்துள்ளது. இந்தியாவில் தான் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.
எனவே, இந்திய ரசிகர்கள் போட்டிகளை அதிக அளவில் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இந்தத் தொடரிலும் இந்திய அணி முதலில் விளையாடிய வங்கதேச அணிக்கு எதிரான போட்டி பிப்ரவரி 20 வியாழன் அன்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால், வங்கதேச அணி இந்தியாவுக்கு இணையாக ஆடும் என்று எதிர்பார்ப்பு இல்லாததால், வேலை நாளான வியாழக்கிழமை அன்று போட்டி நடத்தப்பட்டது.
அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது. ஏனெனில், அந்த போட்டியை பெருமளவு ரசிகர்கள் நேரலையில் பார்ப்பார்கள். அப்போது அதை வைத்து அதிக விளம்பர வருவாய் ஈட்ட முடியும் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது.
அடுத்து குரூப் சுற்றில் இந்திய அணிக்கு ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டி வேலை நாளன்று நடத்தப்பட்டால், நிச்சயமாக அதிக ரசிகர்கள் அந்த போட்டியை பார்க்க மாட்டார்கள். அதனால், போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் இணைய நிறுவனங்களுக்கு விளம்பர வருவாய் ஈட்டுவதில் சிரமம் ஏற்படும்.
அதே சமயம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினால், நிச்சயமாக பெருமளவு ரசிகர்கள் போட்டியில் நேரலையில் பார்ப்பார்கள். நியூசிலாந்து அணி எப்போதும் இந்திய அணிக்கு சவாலானதாகவே இருக்கும் என்பதால் போட்டி பரபரப்பாக நடைபெறும்.
மற்ற டீம்களுக்கு ஒரு நியாயம்.. இந்தியாவுக்கு ஒரு நியாயமா? கொந்தளித்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்
அதனால்தான் இந்தியா - நியூசிலாந்து போட்டி 7 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நடத்தப்படுகிறது. இது இந்திய வீரர்களுக்கு சாதகமான விஷயம் தான் என்றாலும், இதில் வியாபாரமும் அடங்கியுள்ளது. இந்தியாவை விட்டுவிட்டு இது போன்ற பெரிய தொடர்களை நடத்துவதிலும் சிக்கல் உள்ளது. அப்போது போதிய வருவாயை ஈட்ட முடியாது.
இந்திய அணி குரூப் சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி விட்ட நிலையில், இந்தியா ஆடும் அரையிறுதிப் போட்டியும் துபாயில் தான் நடைபெற உள்ளது. அந்த போட்டி மார்ச் 4 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டி வேலை நாள் அன்று நடைபெறுவதால், பெரும் அளவு ரசிகர்கள் போட்டியை பார்ப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
எனவே, இந்தியா - நியூசிலாந்து போட்டியை வைத்து தான் அந்த விளம்பர வருவாய் இழப்பையும் சரி செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. மார்ச் 9 அன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஒருவேளை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த போட்டி இந்த தொடரில் அதிக ரசிகர்கள் நேரலையில் பார்த்த போட்டியாகவும் இருக்கும்.