ARTICLE AD BOX
சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம்.பி. சுப்ரியா சுலே, ஏர் இந்தியாவின் விமானச் சேவைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “ஏர் இந்தியா விமானங்கள் முடிவில்லாமல் தாமதமாகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் பிரீமியம் கட்டணங்களைச் செலுத்துகிறோம், ஆனால், விமானங்கள் ஒருபோதும் சரியான நேரத்தில் வருவதில்லை. நான், ’ஏர் இந்தியா’ விமானமான AI0508-ல் பயணம் செய்து கொண்டிருந்தேன். இது 1 மணி நேரம் 19 நிமிடங்கள் தாமதமானது. இது, பயணிகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான தாமதப் போக்கின் ஒரு பகுதி. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழில் வல்லுநர்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவரும் இந்த தொடர்ச்சியான தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்து ஏர் இந்தியாவை பொறுப்பேற்க வலியுறுத்த வேண்டும்" என அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், “தாமதங்கள் மிகவும் வெறுப்பூட்டும் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே அவ்வப்போது செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவை விமான அட்டவணையைப் பாதிக்கலாம். இதுபோன்ற ஒரு பிரச்னை காரணமாக இன்று மாலை மும்பைக்கு நீங்கள் புறப்பட்ட விமானம் ஒரு மணி நேரம் தாமதமானது. உங்கள் புரிதலை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.