இதற்காகத்தான் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்கிறேன் - மகேந்திரசிங் தோனி

3 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு முழுமையாக ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 43 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கடந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.

அத்துடன் அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி இறுதி ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இதனிடையே அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான சென்னை அணியில் தோனி அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரே அவரது கடைசி தொடர் என்று அனைவரும் நினைத்த வேளையில் அடுத்த சீசனிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது அனுபவமும் அறிவும் நிச்சயம் சென்னை அணிக்கு கை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் கடினமான ஐ.பி.எல். தொடரில் வயதிற்காக எந்த கருணையும் கிடைக்காது என்று தோனி தெரிவித்துள்ளார். எனவே அதில் 43 வயதிலும் அசத்துவதற்காக வருடம் முழுவதும் பிட்னெஸ் கடைபிடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வருடத்தில் நான் சில மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். ஆனால் அதை விளையாட தொடங்கிய கால கட்டத்தை போல் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அதுவே என்னைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது. அதே சமயம் அதற்காக நான் 6 - 8 மாதங்கள் கடினமாக உழைக்கிறேன். ஏனெனில் ஐ.பி.எல். என்பது மிகவும் கடினமான தொடர்களில் ஒன்று. அதில் நீங்கள் எவ்வளவு வயதானவர்கள் என்பதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

நீங்கள் அதில் விளையாடினால் அங்கு அசத்துவதற்கு தேவையான திறமையை கொண்டிருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டை நான் விளையாடத் தொடங்கியபோது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பற்றி பெரிய பின்புலம் இல்லாத மாநிலத்தில் இருந்த வந்த எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததும் நாட்டுக்காக பங்காற்ற விரும்பினேன்.

எனக்கு நாடு மட்டுமே முக்கியமாக இருக்கும். நானும் நம் நாட்டின் வெற்றி பெற்ற அணியில் அங்கமாக இருக்க விரும்பினேன். அதற்காக நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய தொடர்களிலும் வெற்றிக்காக பங்காற்ற முயற்சிக்க வேண்டும். இப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டேன். அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீதான எனது காதல் அப்படியே தான் இருக்கும்" என்று கூறினார்.


Read Entire Article