ARTICLE AD BOX
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் களம் கண்டது.
இந்தியா பந்துவீச்சு தேர்வு
முன்னதாக, டாஸ் ஜெயித்த இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை விக்கெட் கீப்பர் சால்ட்டும், டக்கெட்டும் தொடங்கினர். ஆனால், அவர்களை வந்த வேகத்திலேயே அர்ஷ்தீப் சிங் காலி செய்தார். அதேநேரத்தில், கேப்டன் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட ஆரம்பித்தார்.
மிரட்டிய பட்லர்.. சுருட்டிய வருண்!
ஆனால், மறுமுனையில் வந்த வீரர்கள் எவரும் அவருக்கு துணையாக நின்று ஆடாததால், அந்த அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்குச் சுருண்டது. இதில் கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சும் இங்கிலாந்து வீரர்களை ரன் எடுக்க விடாமல் திணறச் செய்தது. இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அர்ஷ்தீப் சிங் சாதனை!
இன்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களை எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இவர், 61 போட்டிகளில் 97 விக்கெட்களை எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஐபிஎல் தொடரில் சாதித்திருக்கும் யுஷ்வேந்திர சாகல் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 96 விக்கெட்களைப் பறித்துள்ளார். 3வது இடத்தில் புவனேஷ்குமாரும் (90), 4வது இடத்தில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர். அவர்கள் இருவரும் தலா 89 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
அதிரடி தொடக்கம்.. சஞ்சு 26 ரன்னில் அவுட்!
பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கு அனுப்பி ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தினர். எனினும் அதிரடியாய் ஆடிய சாம்சன் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பின்னர் களத்திற்கு வந்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். ஆனால் அவர் ரன் ஏதுமின்றி டக் அவுட் ஆகி வெளியேறினார். ஜோப்ரா ஆச்சரின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணிக்கு தடுமாற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இனிமே தான் ஆட்டம் ஆரம்பம் என பட்டையை கிளப்பினார் அபிஷேக் ஷர்மா. எல்லைக்கோட்டிற்கு அப்பால் பந்துகளை அனுப்பிக் கொண்டே இருந்தால். அபிஷேக்கின் சிக்ஸர் மழையை இங்கிலாந்து வீரர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன் பிறகும் அதிரடியை அவர் நிறுத்தவில்லை.
8 சிக்ஸர்கள் விளாசல்..
34 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 16 பந்துகளில் 19 ரன்களும், ஹர்திக் பாண்டியா 4 பந்துகளில் 3 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர்.