இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

3 hours ago
ARTICLE AD BOX

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

அபிஷேக் சர்மா அபாரம்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய போதிலும், 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கம் முதலே அபிஷேக் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்த வண்ணமே இருந்தது. அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் அரைசதம் எடுத்தார். அரைசதம் எடுத்த பிறகு, அவர் மேலும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஷிவம் துபே 13 பந்துகளில் 30 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இங்கிலாந்து அணியில் பில் சால்ட் அதிகபட்சமாக 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக ஜேக்கோப் பெத்தேல் அதிகபட்சமாக 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே மற்றும் அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

Read Entire Article