ARTICLE AD BOX
சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் இந்தியா 4- என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 5 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 51 ரன்கள் மட்டுமே அடித்தார். குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஷார்ட் பிட்ச் பந்துவீச்சில் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் சாம்சன் ஈகோவுடன் விளையாடி தன்னுடைய விக்கெட்டை பரிசளித்ததாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அதுவே அவர் தடுமாற காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்சன் பேருந்தை தவற விட்டது போலிருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து 5-து முறையாக அவர் ஒரே மாதிரியாக அடித்து அவுட்டானார். அவர் தனது ஈகோவை காட்ட முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். குறிப்பாக என்னால் இந்த ஷாட்டை அடிக்க முடியும் என்று அவர் காண்பிக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். இதுதான் அவர் தடுமாறியதற்கு காரணம் என்று நினைக்கிறேன். அப்படி அவர் ஈகோவுடன் செல்கிறாரா அல்லது உண்மையில் தடுமாறுகிறாரா என்பது தெரியவில்லை.
அவரை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கு நான் சோகத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினேன். ஆனால் சாம்சன் இப்படியே தொடர்ந்து விளையாடினால் மன்னிக்கவும் நன்றி சொல்லி விட்டு ஜெய்ஸ்வாலை மீண்டும் கொண்டு வாருங்கள். இப்படியே சென்றால் அடுத்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் தாமாக தொடக்க வீரராக விளையாடுவார் என்பதே என்னுடைய கருத்து" என்று கூறினார்.