ARTICLE AD BOX
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு தலைவலியாக திகழும் 5 முக்கிய பலவீனங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- ஒரு நிமிடத்துக்கு முன்னர்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் துபையில் இன்று(மார்ச்4) நடக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களமிறங்குகிறது இந்திய அணி.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 3 ஆட்டங்களுமே துபையில்தான் நடந்துள்ளன.
துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் இந்திய அணி பலமானதாக கருதப்பட்டாலும், சில பலவீனங்கள் இருக்கவே செய்கின்றன.
ஓர் அணியை வீழ்த்துவதற்கு அந்த அணியில் உள்ள வீரர்களின் பலவீனத்தை தொட்டுவிட்டாலே எதிரணிக்கு வெற்றி கிடைத்துவிடும். அந்த வகையில் வெளித்தோற்றத்தில் இந்திய அணி பந்துவீச்சு, பேட்டிங்கில் வலிமையாக இருந்தாலும் சில பலவீனங்களும் மறைந்துள்ளன. அத்தகைய, இந்திய அணியின் 7 முக்கிய பலவீனங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா?
- வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்
- தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?
- சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா?

கோலி, ரோஹித்தை அச்சுறுத்தும் பலவீனம்
இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகிய 3 பேருமே தரமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறுகின்றனர். ஆடம் ஸம்பா பந்துவீச்சில் சரியான லென்த்தை பிக் செய்து விளையாடுவதில் ரோஹித், கோலி இருவருக்கும் குழப்பம் இருக்கிறது. இருவருமே லெக் ஸ்பின்னில் அதிக முறை ஆட்டமிழந்துள்ளனர். ரோஹித் சர்மா சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 67.33 சராசரிதான் வைத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 97 வைத்துள்ளார்.
விராட் கோலி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 68 ரன்கள் சராசரியும், 92 ஸ்ட்ரைக் ரேட்டும்தான் வைத்துள்ளார். ஆகவே இருவருமே சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் திணறக் கூடியவர்கள். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக டாப்ஆர்டர் பேட்டர்கள் சற்று நம்பிக்கை குறைந்தவர்களாகவே இருப்பது பலவீனமாகும்.
அதிலும் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலியின் பேட்டிங் சமீபகாலத்தில் மோசமாகவே இருந்துள்ளது. கடந்த 7 இன்னிங்ஸ்களில் கோலி 5 முறை லெக்ஸ்பின்னில் ஆட்டமிழந்துள்ளார். 2020ம் ஆண்டுவரை கோலி லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 72 சராசரி வைத்திருந்தாலும், 2020ம் ஆண்டுக்குப்பின் அது 41 ஆகக் குறைந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியை 5 முறை ஆடம் ஸம்பா ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆதலால் ஆடம் ஸம்பா பந்துவீச்சு கோலிக்கு எதிராக பெரிய ஆயுதமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நம்பிக்கை குறைவு, தடுமாற்றம்
ஆஸ்திரேலிய அணி 2023 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக வங்கதேசம், தென் ஆப்ரிக்காவிடம் ஒருநாள் தொடர்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடக்கமும் அந்த அணிக்கு மோசமாகவே இருந்தது. ஆனால், பின்னர் விஸ்வரூமெடுத்து ஆடிய ஆஸ்திரேலிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு புது உற்சாகமும் புது தெம்பும் வந்து விட்டது போல ஆடுவார்கள். களத்தில் கிரிக்கெட் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் எதிரணியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் வார்த்தை விளையாட்டிலும் ஈடுபடுவார்கள். தங்களது வியூகங்களை களத்தில் செயல்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பதால்தான் ஆஸ்திரேலிய அணியால் சாம்பியன் பட்டத்துக்கான பைனலில் பதற்றமின்றி விளையாட முடிகிறது.
ஆனால் இந்திய அணியைப் பொருத்தவரை, டி20, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய வீரர்கள் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், நாக் அவுட் மற்றும் இறுதிப்போட்டி ஆகிய முக்கியமான கட்டங்களில் சொதப்பிவிடுகிறார்கள். முக்கியமான கட்டங்களில் இந்திய வீரர்கள் பதற்றம் அடைந்து ஆட்டத்தில் கோட்டை விடுவது அணிக்கு பெரிய பலவீனமாகும்.
- உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்? 28 பிப்ரவரி 2025
அனுபவமற்ற வேகப்பந்துவீச்சு
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சில் முகமது ஷமி மட்டுமே 100 ஒருநாள் போட்டிகளுக்கும் மேல் விளையாடிய அனுபவம் கொண்டவர். ஆனால், நிதிஷ் ராணா, அர்ஷ்தீப் சிங் இருவரும் 20 போட்டிகளுக்குள் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.
மினி உலகக் கோப்பை எனப்படும் இந்த பெரியதொடரில் அனுபவமற்ற இந்திய வீரர்களின் வேகப்பந்துவீச்சு பலவீனமாகும். முக்கியக் கட்டத்தில் எவ்வாறு விக்கெட் வீழ்த்துவது, பேட்டர்களின் பலவீனம் அறிந்து பந்துவீசுவது, எவ்வாறு வியூகங்களை அமைப்பது போன்றவற்றில் போதிய அனுபவம் இல்லாதது பலவீனமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தலைவலியாக திகழும் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சமாளிப்பதில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே தோல்வி அடைந்துள்ளனர். டிராவிஸ் ஹெட்டும் கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் 1,260 ரன்களைக் குவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக இவ்வளவு ரன்களை குறுகியகாலத்தில் குவிக்கவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் ஆகியவற்றில் டிராவிஸ் ஹெட்டின் ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருந்துள்ளது, அவரை சமாளிப்பதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பலவீனமாக இருக்கிறார்கள்
டிராவிஸ் ஹெட்டை பலமுறை ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்கச் செய்துள்ளார், ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக ஹெட் 73 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதுதான் ஆறுதலாகும்.
சுப்மான் கில்லின் முக்கிய பலவீனம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில ஆண்டுகளாக சுப்மான் கில் பேட்டிங் செய்யும் குறிப்பிட்ட தவறை, பலவீனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. கில்லின் பலவீனத்தைக் கண்டறிந்து இதுவரை நியூசிலாந்தின் கெயில் ஜேமிஸன், சவுத்தி, ஹென்றி ஆகியோரும் ஐபிஎல் தொடரில் ரபாடா, ஆன்டர்ஸன், ஷமி ஆகியோரும் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
அதாவது ஸ்டெம்பிலிருந்து 6 முதல் 8 மீட்டருக்கு முன்பாக லென்த்தில் பந்து பிட்ச் ஆகினால் பிரண்ட்புட் எடுத்து விளையாடுவதில் இன்னும் சுப்மன் கில்லுக்கு குழப்பம் நீடிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஹென்றியின் பந்துவீச்சிலும் இதேபோலத்தான் சுப்மன் கில் காலை முன்தூக்கி வைத்து ஆடுவதில் குழப்பமடைந்து கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதே தவறை ஆஸ்திரேலிய அணியிடம் கில் செய்தால் விரைவாக விக்கெட்டை இழக்க நேரிடும். ஏனென்றால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஐசிசி தொடர்களின்போது நன்றாக ஹோம் ஓர்க் செய்துதான் களத்துக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)