ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைப்ரிட் மாடலில் நடைபெற்றுவரும் போட்டியில், இதுவரை 6 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
6 போட்டிகளின் முடிவில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
இந்நிலையில் 7வது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் தலா 1 போட்டியில் வென்றுள்ள இரண்டு அணிகளான தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்தன.
ஆட்டம் மழையால் ரத்து..
ராவல்பிண்டியில் போட்டி நடைபெறவிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் டாஸ் போடப்படாமல் ஆட்டம் தள்ளிப்போனது. மழை நின்றுவிடும் என காத்திருந்த அம்பயர்கள், கடைசி வாய்ப்பாக போட்டியை 20 ஓவர்கள் ஆட்டமாக நடத்தத் திட்டமிட்டனர்.
ஆனால், கடைசிவரை பிட்ச் பராமரிப்பாளர்களுக்கு மழை வாய்ப்பே வழங்காத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதால் குரூப் பி பிரிவில் 4 அணிகளுக்குமே அரையிறுதிக்கு தகுதிபெற ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. விளையாடிய ஒரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோற்ற நிலையில், மீதமிருக்கும் 2 போட்டிகளை வென்றால் அவ்விரு அணிகளும் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
எனவே, நாளை இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் நிலையில், அப்போட்டி இரு அணிக்குமே முக்கியமான போட்டியாக அமையவிருக்கிறது.