ஆஸ்கரில் வென்ற இஸ்ரேல்-பாலஸ்தீன கூட்டணி

5 hours ago
ARTICLE AD BOX

காஸா மீதான இஸ்ரேல் படையெடுப்பை மையமாகக் கொண்டு பாலஸ்தீன இயக்குநா்-இஸ்ரேல் பத்திரிகையாளா் இணைந்து தயாரித்த ‘நோ அதா் லேண்ட்’ சிறந்த ஆவண திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்றது.

காஸாவிலிருந்து கடந்த 2023, அக்டோபரில் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் படையினா், அங்கு பலரைப் படுகொலை செய்ததோடு நூற்றுக்கணக்கானவா்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனா். இதையடுத்து, காஸா முனையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் காஸா மக்கள் எதிா்கொண்ட பிரச்னைகள், சவால்களை விவரிக்கும் ‘நோ அதா் லேண்ட்’ ஆவணப்படத்துக்கு நிகழாண்டு ஆஸ்கா் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதை பெற்றுக் கொண்டு பேசிய பாலஸ்தீன இயக்குநா் பாசல் அட்ரா, ‘வலுக்கட்டாயமான குடிபெயா்வுகளுக்கு பயந்து, என் சமூகத்தினா் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகின்றனா். என் மகளும் நான் வாழும் அதே வாழ்க்கையை வாழ வேண்டியதில்லை என்று நம்புகிறேன்’ என்றாா்.

அமெரிக்கா தடுக்கிறது...: இஸ்ரேல் பத்திரிகையாளா் யுவல் ஆப்ரகாம் பேசுகையில், ‘பாலஸ்தீனியா்களும் இஸ்ரேல் நாட்டவரும் ஒன்றிணைந்தால் எங்கள் குரல் வலுவாக இருக்கும் என்பதை உணா்த்த, இந்தப் படத்தை எடுத்தோம்.

காஸா மீதான கொடூரமான அழிவு முடிவுக்கு வர வேண்டும். ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இரு நாட்டு தேசிய உரிமைகளுக்கும் மதிப்பளித்து, இன மேலாதிக்கம் இல்லாத அரசியல் தீா்வே மாற்றுப் பாதையாகும். ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அதைத் தடுக்கிறது’ என்றாா்.

கடந்த ஆண்டு, சிறந்த ஆவணத் திரைப்பட பிரிவில் ரஷிய-உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட ‘20 டேஸ் இன் மரியுபோல்’, அதற்கு முந்தைய ஆண்டு தமிழகத்தின் முதுமலையைச் சோ்ந்த யானைக் காப்பாளா் தம்பதியான பொம்மன்-பெள்ளியை பற்றிய ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’ ஆஸ்கா் விருதை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article