ARTICLE AD BOX
*கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயிகள் ஆர்வம்
பாடாலூர் : ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பிரதான மாவட்டமாக திகழ்வது பெரம்பலூர். இங்கு விளையும் வெங்காயத்துக்கு தமிழகம் முழுவதும் மவுசு உண்டு. ஆலத்தூர் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களில் சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் கிணற்றுப் பாசனம் மூலம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, காரை, நாட்டார்மங்கலம், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், டி.களத்தூர், அடைக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சின்ன வெங்காய நடவு பணி தற்போது துவங்கி உள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தில் உழுது, அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்து கிணற்றுப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி சின்னவெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு வார காலமாக சின்ன வெங்காயம் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் நடவு செய்ய சுமார் 600 கிலோ முதல் 700 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படுகிறது.
அதனால் விதை வெங்காயம் மட்டும் சுமார் ₹15 முதல் ₹20 ஆயிரத்திற்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் அடி உரம், பூச்சி மருந்து, நடவுப்பணி, களை எடுக்கும் பணி, அறுவடைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ₹30 ஆயிரத்திற்கும் மேல் தேவைப்படுகிறது. என்றனர்.
The post ஆலத்தூர் தாலுகா பகுதியில் 8 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் நடவு பணி appeared first on Dinakaran.