ARTICLE AD BOX
ஒவ்வொருவரும் தன்னைத்தானே முழுமையாக புரிந்து உணர்ந்து வைத்திருக்க வேண்டும். மனித வாழ்க்கை என்பது கேள்விகளில் இருந்துதான் தொடங்குகிறது. ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளுக்கு கேள்வி தேவையில்லை. ஆனால் ஆறு உணர்வுகள் கொண்ட மனிதனுக்குத்தான் கேள்விகள் தேவை. காரணம் மனிதர்கள் ஆக்கபூர்வமான ஆற்றல் மிக்க மனம் கொண்டவர்கள்.
கேள்விகள் எழவில்லை என்றால் எப்படி வாழ வேண்டும்,எப்படிச் செயல்பட வேண்டும் போன்ற விஷயங்கள் அனைத்தும் முறையாக ஒரு அமைப்பின் கீழ் வரையறைக்குட்படுத்தப்பட்ட முறையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பொருள்.
ஐந்து உணர்வுகள் கொண்ட ஜீவராசிகளையும் படைக்கும்போதே அவை எப்படியெப்படி இருக்க வேண்டும் அதற்கரிய அனைத்து செயல்பாட்டு அமைப்பு முறைகளையும் அதனதன் மூளைக்குள் பதித்துப் படைத்திருக்கிறார். எத்தனை கோடி ஆண்டானாலும் இந்த பதிப்புகள் மாறவே மாறாது.
இதற்கு ஒரு உதாரணம், தூக்கணாங்குருவிக்கூடு. அந்த கூட்டைக்கட்ட அதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? தூக்கணாங் குருவிக் கூடுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆண் பறவைகளின் கூடுகள் அதற்கேற்ற முறையில் இருக்கும் பெண் பறவைகளுக்கு ஏற்ற முறையில் ஒரே அமைப்பில் இருக்கும்.
தூக்கணாங்குருவி முட்டையிடும் நேரம் வரும்போது மட்டும்தான் கூடு கட்டும். அதன் குஞ்சுகள் பறக்கின்ற தன்மை வந்தவுடன் அது கூட்டை விட்டு போய்விடும். அது நிரந்தரமாக அதில் தங்காது. இது போன்று மற்ற பறவைகள் மிருகங்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் வரையறுக்கப்பட்ட பதிப்பு முறையில் தலையெழுத்தை இறைவன் கொடுத்துவிட்டார்.
வரையறுக்கப்பட்ட விதியின் கீழ் இயங்கும் இவைகளுக்கு கேள்விகள் தேவை இல்லை. ஆனால் மனிதர்களுக்கு ஆறாவது உணர்வாகிய மனம் இருக்கிறது. அந்த மனதிற்கு இறைவன் எந்த ஒரு வரையறுக்கப்பட்ட வழி முறைகளையும் ,அமைப்பு முறைகளையும், விதிமுறைகளையும் போடவே இல்லை. அதனால்தான் மனிதனுக்கு விதி என்ற தலையெழுத்து எதுவும் கிடையாது. அப்படி விதி என்றும் தலையெழுத்து என்றும் மனிதனுக்கு இருந்திருந்தால் மனிதனுக்குள் கேள்விகளே எழும்பியிருக்காது. சிந்திக்கக் கூடிய ஆற்றல் இருந்திருக்காது.
மனிதனை எதற்காக உருவாக்கினார்? இதிலிருந்து பல கேள்விகள் தொடர்ந்து போகும். இறைவன் மனிதனுக்கு ஆறாவது உணர்வாகிய மனதைக் கொடுத்து பறவை மிருகம் இவற்றிலிருந்து உயர்த்தி அதிசயிக்கத்தக்க வகையில் உருவாக்கி உள்ளார். மனித மனதிற்கு வரையறுக்கப்பட்ட விதிமுறையை பதிக்கவில்லை. அதனால்தான் மனிதனின் ஆற்றல் அளவிடமுடியாத, பிரமிக்கத்தக்க, பிரம்மாண்டமான கார்யங்களை செய்ய முடிகின்றது.
இப்படி அளவிட முடியாத ஆற்றலை மனிதன் முறையாக முழுமையாக பயன்படுத்திதானும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றி சிறந்த முறையில் சமுதாயத்தை உயர்த்த முற்பட வேண்டும்.