ARTICLE AD BOX
ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கிய ஆர்ஜென்டீனா நாட்டின் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அவரது அமைச்சரான ஜூலியோ மிகுவேல் டி விட்டோ மற்றும் அவர்கள் இருவரது குடும்பத்தினர்களுக்கும் இந்த பயணத் தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கவைச் சேர்ந்த ஆர்ஜென்டீனா நாட்டின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை குற்றவாளியென தீர்ப்பளித்து அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இதையும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!
இதுகுறித்து அமெரிக்க அரசின் தலைமை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா மற்றும் டி விட்டோ ஆகிய இருவரும் தங்களது பதவியைப் பயன்படுத்தி பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களின் மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆர்ஜென்டீனா அரசுக்கு சேர வேண்டிய பல மில்லியன் டாலர் அளவிலான பணம் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை பல்வேறு நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர் தங்களது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு சர்வதேச அளவிலான ஊழலைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஆர்ஜென்டீனா நீதிமன்றத்தில் கடந்த 2024 நவம்பரில் மேல் முறையீடு செய்தார்.
ஆனால், அங்கு அவரது சிறைத் தண்டனையை உறுதி செய்யப்பட்டு மீண்டும் அதிபர் பதவியிக்கு போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.