ஆரோக்கியத்தின் நெருங்கிய நண்பன் சீரகம்

3 days ago
ARTICLE AD BOX

சீரகத்தின் மருத்துவ குணத்துக்கு அளவில்லை! செரிமான கோளாறுகளுக்கு தீர்வு தருவது மட்டுமல்ல, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது..! தோல் அரிப்பு தொடங்கி பல தொற்று நோய்களுக்கும் தீர்வு தரும் அரிய மருத்துவ அம்சங்கள் வரிசை கட்டி நிற்பதால், இது ஆரோக்கிய ரகசியங்கள் புதைந்துள்ள பொக்கிஷமாகும்;

‘பார்ப்பதற்கோ சாது… ஆனால் வெடித்துச் சிதறினால் தீப்பொறி…’ இந்தச் சொற்றொடர் சில வகையான மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நமது சமையலறையில் அமைதியாக மெளனம் காத்துக்கொண்டிருக்கும் சீரகத்துக்கு நன்குப் பொருந்தும்.

அதாவது சீரகத்தை மட்டும் கடித்துச் சாப்பிடும் போது, வாசனையோ சுவையோ பெரிதாகத் தெரியாது! ஆனால் தனது சக நறுமணமூட்டிகளுடன் சேர்ந்து  சமையலுக்காகத் தோள் கொடுக்கும் போது, மாய வித்தைக்காரரின் தொப்பியிலிருந்து வெளிவரும் முயலைப் போல, சீரகத்தின் நறுமணமும் இன்சுவையும் நம்மை மதிமயக்கும்.

உலகளாவியப் பரவல்:

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் மருத்துவ நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. மெக்சிகோவின் ‘டகோஸ்’, மேற்கிந்திய தீவுகளின் காரமான பாரம்பரிய உணவு, போர்த்துகீஸியர்களின் ‘சீரக பிரெட்’ என சீரகத்தின் பயணம் விசாலமானது.

அரேபிய நாட்டு பாரம்பரிய மருத்துவத்தில், பால்வினை நோய்களுக்குச் சீரகத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களாம். பாரம்பரிய மருத்துவம் செழித்தோங்கும் நாடுகளில் சீரகத்தின் பயன்பாடு மிக அதிகம். ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா எனப் பல கண்டங்களிலும் சீரகத்தின் மகத்துவம் பரவியிருக்கிறது. கருஞ் சீரகத்தின் பயன்கள் மிக அதிகமானதாகும்.

சீரகம் இருக்க பயமேன்:

‘செரிமான பிரச்சனை என்றாலே சீரகம் தான்…’ என நமது மரபணுவில் பதிந்திருந்தது. ஆனால் சமீபமாக அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் நிகழ்ந்து, செரிமானப் பிரச்சனை என்றாலே ஆண்டாசிட் மருந்துகள் தாம் என்று சிந்தனை நகரும் இடத்துக்கு வந்து விட்டோம்! ஆனால், எவ்வித பக்க விளைவுகளுமின்றி செரிமான சிக்கல்களை அவிழ்ப்பதில் சீரகத்துக்கு நிகர் சீரகமே!

ஆய்வுகளும் சீரகத்தின் பக்கமே நிறகின்றன! வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும் ‘Helicobacter-pylori’ பாக்டீரியாவிற்கு வலுவான எதிர்க்கட்சியாகச் சீரகம் செயலாற்றுகிறதாம். சித்த மருத்துவத்தில் வயிற்றுப் புண்களுக்கான மருந்துகள் தயாரிக்கும் போது சீரகத்தை நுணுக்கமாகச் சேர்க்கும் வழக்கமும் இருக்கிறது. Amylase, Protease, Lipase போன்ற செரிமான ஊக்கிகளின் செயல்பாடுகளைச்  சீரகம்  சிறப்பாக்கும்.

வயிற்றுக்குள் களேபரமா:

சாப்பிட்டு முடித்தவுடன் வயிற்றுக்குள் காற்றின் அசைவும், ஓசையின் அதிர்வும் பலமாகக் கேட்கிறதா? சீரக நீரை நன்றாக ருசித்துப் பருகுங்கள், விரைவில் உங்கள் வயிற்றுக்குள் ‘புயலுக்குப் பின்னே அமைதி’ எனும் சூழல் ஏற்படும். சிறிது சீரகத்தை நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, தண்ணீரின்  நிறம் இளமஞ்சள் நிறமாக மாறியபின் வடிகட்டி கொதிநீராகப் பயன்படுத்தலாம். சீரகத்திலிருக்கும் நுண்பொருட்கள், தண்ணீரில் இரண்டறக் கலந்து நோய்களைப் போக்கும் மருத்துவ நீராக உயிரோட்டம் பெற்றுவிடும்.

என்புகளின் பாதுகாவலன்:

மாதவிடாய் நிற்கும் தருவாயில் உண்டாக வாய்ப்பிருக்கும் என்பு அடர்த்திக் குறைவு பிரச்சனையைத் தள்ளிப் போடும் சக்தி சீரகத்துக்கு இருக்கிறது. இளவயது முதலே சீரகத்தைக் கொஞ்சம் கூடுதலாக உணவுகளில் சேர்த்து வர என்புகளுக்குப் பலமுண்டாகும். குறிப்பாக பெண்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தலாம். ‘என்புகளின் பாதுகாவலன்’ என்று இனி சீரகத்தைப் பாசமாக அழைக்கலாமே!

சீரகத்தில் ஊறுகாயா:

‘சீரக ஊறுகாய்…’ கேட்கும் போதே எச்சில் சுரப்பிகள், தன்னிலை மறந்து சுரக்கின்றனவே! காய் மற்றும் வற்றல் ரகங்களில் ஊறுகாய் தயாரிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அஞ்சறைப் பெட்டியின் முக்கிய உறுப்பினரான சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் ஊறுகாய், தொடுகைக்குப் பயன்படுவது மட்டுமன்றி, செரிமானத்தைச் சீராக்கும் மருத்துவ இணை உணவாகவும் செயல்படக்கூடியது.

குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் செரியாமை சார்ந்த பிரச்சனைகளையும் சீரகம் நிவர்த்தி செய்யும். எப்படியென யோசிக்கிறீர்களா… கெட்டுப் போன உணவுகளில் ஒளிந்து கொண்டு வரும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறமைச் சீரகத்திற்கு உண்டு. மேலும், இதிலுள்ள ‘Cymene’ பழைய உணவுகளில் தோன்றும் பூஞ்சைகளையும் எதிர்த்துப் போரிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதற்காகக் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து உணவுகளைச் சாப்பிட  வேண்டாம். அது மாபெரும் உணவியல் குற்றம்!

பற் சொத்தையை உண்டாக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus mutans) பாக்டீரியாக்களுக்கு எதிராக சீரகத்திலுள்ள ‘Cuminaldehyde’ செயல்படுகிறது. விஷ உணவுக் குறி குணங்கள் (Food poisoning) ஏற்படாமல் தடுப்பதற்கும் சீரகம் பயன்படும். தவறான உணவுத் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைக் களைவதற்கு நம்மிடையே இருக்கும் பொக்கிஷமாகச் சீ ரகத்தை சொல்லலாம்.

சீரகப் பொடி:

அரைக் கரண்டி சீரகத்தைப் பொடித்து வைத்துக் கொண்டு, 5,6 கிராம்பு… மற்றும் கைப்பிடி இலவங்கப்பட்டை இலேசாக வறுத்து பின் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, 1/4 ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ப்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க உடலில் தோன்றும் அரிப்பு பறந்துப் போகும்.

சித்த மருத்துவம்: ‘வாந்தி யருசி குன்மம் வாய்நோய் இரைப்பிருமல்…. சீரகமுண்ணப் போம்…’ என்று சித்தர் தேரையர், சீரகத்தின் நோய் போக்கும் மகிமைகளைப் பற்றி பாடலாகக் கொடுத்திருக்கிறார். பித்தம் சார்ந்த நோய்களை விரட்டுவதில் சீரகம் கில்லாடி. விக்கலுக்கான மருந்தில் சீரகத்தின் பங்கு முக்கியமானது. ‘எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்…’ எனத் தொடங்கும் மருத்துவப் பாடல் அதற்கான வழிமுறைகளை விளக்குகிறது.

சித்த மருந்தான பஞ்ச தீபாக்கினி சூரணத்தில் சீரகம் முக்கிய உறுப்பினர். வயிறு உப்பிசமாகத் தோன்றும் போது கால் ஸ்பூன் அளவு சீரகப் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். சீரகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் அசைத் தைலத்தைப் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் செய்ய பித்த நோய்கள் தலைத் தூக்காது!

வெளிப்பிரயோகமாகவும் சீரகம் தனது இருப்பை நிரூபிக்கும். சீரகத்தை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, சொறி சிரங்குகளுக்குப் பூசலாம். சீரகம், உப்பு, தேன்… மூன்றையும் அரைத்து பூச்சிக்கடிகளுக்குத் தடவலாம். வயிற்றுவலி ஏற்படும்போது, சீரகத்தை நெய்விட்டு அரைத்து, தொப்புளைச் சுற்றி பற்றுப் போட குணம் கொடுக்கும்.

ஆய்வுக் களம்: சீரகத்தின் மருத்துவ குணத்துக்கு அதில் உள்ள Cuminaldehyde காரணகர்த்தா! காச நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளின் (Anti tuberculosis drugs) நோய் போக்கும் தன்மையைச்  சீரகம் அதிகரிக்கிறது. சீரகத்திலிருக்கும் மருத்துவ குணம் மிக்க எண்ணெய்களும், வைட்டமின் கூறுகளும், அதன் நோய் போக்கும் தன்மையை வெகுவாக அதிகரிக்கின்றன. இரத்தச் சர்க்கரை அளவுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை சீரகத்துக்கு இருப்பது சிறப்புச் செய்தி. வயிறு மற்றும் கல்லீரல் புற்று நோயைத் தடுக்கும் தன்மை சீரகத்துக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தனது பெயரிலேயே மருத்துவ அக்கறைக் கொண்டது சீரகம். அகத்துக்குள் (வயிற்றுக்குள்) இருக்கும் பிரச்சனைகளைச் சீர் செய்வதால் சீரகம் எனும் பெயர்! சீரகம் சேர்க்கப்படாத உணவு மசாலா கலவைகள் இந்திய சமையலில் கிடையாது! வேனிற்காலங்களில் சீரகம் ஊற வைத்த நீரைப் பயன்படுத்த உடல் வெப்பம் குறையும்.

கவனம்…

அரைத்து வைத்த சீரகப் பொடிகளைக் கடைகளில் வாங்குவதற்குப் பதிலாக முழு சீரகமாக வாங்குவதே சிறந்தது! பொடியாகக் கிடைக்கும் சீரகத் தூளில் கலப்படத்துக்கான வாய்ப்புகள் அதிகம். முழு சீரகத்திலும் பல தாவரங்களின் காய்ந்த சருகுகள் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்து சமையலில் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா?… மெல்லிய வறுப்பில் நறுமணத்தையும்,  நற்கூறுகளையும் சீரகம் அதிகமாய் உமிழும்!

சீரகம்… செரிமானத்துக்கு நெருங்கிய நண்பன்!…

–   மரு.வி.விக்ரம்குமார் MD(S)

 

Read Entire Article