ARTICLE AD BOX
உடல் ஆரோக்கியமாக இருக்க உணவே பிரதானம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது விதவிதமான உணவுகள் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் நம்மை சுண்டி இழுக்கின்றன. இவற்றில் எந்த விதமான சத்துக்கள் இருக்கின்றன? நமக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆரோக்கியமான சிற்றுண்டிகள்:
1. நட்ஸ் மற்றும் கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததால் கொழுப்பைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
2. பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3. காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி நோய் பாதிப்பை தடுக்கும்.
4. புரதங்கள் நிறைந்த தின்பண்டங்களான தயிர், வேகவைத்த முட்டை அல்லது பாலாடைக்கட்டி போன்றவை தசைகளின் வலு மற்றும் கட்டமைப்பிற்கு உதவும்.
5. முழு தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியம் தரும்.
ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள்:
1. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்றவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளதால், உடல் எடை அதிகரிப்பதோடு, இதய நோய் அபாயமும் அதிகரிக்கும்.
2. சர்க்கரை அதிகமுள்ள குக்கீகள், கேக்குகள் போன்றவற்றில் வெற்று கலோரிகள், செயற்கை சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீண்ட கால நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
3. பதப்படுத்தப்பட்ட ஹாட் டாக், பன்றி இறைச்சி போன்றவற்றில் சோடியம், ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது இதய நோய், நீரிழிவு வகை 2 மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
4. வறுத்த உணவுகளான பிரஞ்சு ஃபிரை, வறுத்த சிக்கன் மற்றும் டோனட்ஸ் போன்ற உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், கலோரிகள் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளன. இது எடை அதிகரிப்பு, இதய நோய் அபாயம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
குறைக்கவும் தவிர்க்கவும் வேண்டியவை:
1. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட மிட்டாய், வேகவைத்த பொருட்கள் மற்றும் இனிப்பு தயிர் போன்றவற்றை குறைந்த அளவில் எடுக்கலாம்.
2. உப்பு (சோடியம்) நிறைந்த தின்பண்டங்களான சிப்ஸ்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றை குறைக்கவும்.
3. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட மைதா ரொட்டி, சர்க்கரைச் சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் போன்றவற்றை கூடிய அளவு தவிர்க்கவும்.
4. செயற்கையாக சுவையூட்டப்பட்டு அடைக்கப்பட்ட ஆற்றல் பானங்கள், மிட்டாய்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஆரோக்கியம் பாதிக்கும் வண்ணங்கள் செயற்கை சுவைகளால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றை எடுப்பதில் எச்சரிக்கை தேவை.
முழு ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கவனத்துடன் கூடிய சிற்றுண்டிகள், சீரான உணவு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வுக்கும் உதவும்.