ARTICLE AD BOX
புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு தரப்பிலிருந்து ஓடிடி தள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஓடிடி தளங்கள் ஐடி சட்டங்கள் - 2021இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நன்னடத்தை நெறிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள பதிவுகளை வெளியிடுவது குறித்து ஓடிடி தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.
மேற்கண்ட தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை வயது ரீதியாக பகுத்து அவை அனைத்து வயதினரும் பார்ப்பதற்கு உகந்ததா என்பதை கவனத்திர்கோளவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏ சான்றிதழ் கொண்ட பதிவுகளை வெளியிடும்போது அதிக கவனம் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓடிடி தளங்களில் செயல்படும் தன்னாட்சி நிறுவனங்கள் மேற்கண்ட தளங்களில் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படும்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஓடிடி தளங்கள் அநாகரீகமான, ஆபாசம் நிறைந்த மற்றும் பாலியல் பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் மக்கள் தரப்பிலிருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.