ARTICLE AD BOX
இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த சாமியாராகத் திகழும் ஜக்கி வாசுதேவ் குறித்தும், ஈஷா யோகா மையத்தில் சிறுமிகளுக்கு நடக்கும் மர்மமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் வட இந்திய பத்திரிகையாளரான ஷியாம் மீரா சிங் மிக துல்லியமாக தகவல்கள் திரட்டி ஆவணங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார். அவை மிகப் பெரிய அதிர்ச்சி ரகம்;
ஒரு காலத்தில் முற்போக்காளர் போன்ற தோற்றம் காட்டி, சகல தரப்பினரையும் கவர்ந்து சிறப்பான ஆன்மீக மற்றும் யோகா பயிற்சிகளை தந்து, மக்களின் பேராதரவை பெற்றவர் ஜக்கி வாசுதேவ். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகள் அவர் மீதான நம்பிக்கையை தகர்க்கின்றன.
சமீபத்தில் (பிப் 24-26) கோவை ஈஷா யோக மையத்தில் சிவராத்திரி விழா தடபுடலாக நிகழ்ந்தது, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமீத் ஷா கலந்து கொண்டு பூஜை புனஸ்காரங்களோடு நில்லாமல் அரசியலும் பேசினார். இதற்கு முனு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு போன்றவர்கள் வந்துள்ளனர்.
இதே சமயத்தில் ஷியாம் மீரா சிங் என்ற வடநாட்டு பத்திரிக்கையாளர் ஒரு காணொலியை யூ டியூபில் வெளியிட்டுள்ளார். இதில் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பி சில தகவல்களை பொது வெளியில் உள்ளது உள்ளபடி வைத்துள்ளார்.
ஜக்கி வாசுதேவின் மிக நெருங்கிய தோழி தான் பாரதி வரதராஜு! ஜக்கியும், தானும் முற்பிறப்பிலேயே ஒன்றாக வாழ்ந்தவர்கள் என்றும் கூறும் பாரதி வரதராஜூ மற்றும் ஈஷா மையத்தின் நிருவாக பொறுப்பில் உள்ள மா பிரதியுத்தா என்ற இரு பெண்மணிகளை பற்றி பல தகவல்களை ஷியாம் மீரா சிங் கூறியுள்ளார்.
பாரதி என்பவர் 1993 ம் ஆண்டிலிருந்தே ஜக்கியுடன் நெருக்கமாக உள்ளவர். இந்த பாரதியின் மீது ஜக்கிக்கு இருந்த மோகத்தின் விளைவே ஜக்கிக்கும், அவரது மனைவி விஜிக்கும் மோதலாகி விஜியின் மர்ம சாவுக்கு காரணமாயிற்று என்பது ஈஷா தொடர்பானவர்கள் அனைவருக்கும் வெகு நாட்களாகவே தெரிந்த செய்தி தான்.
ஜக்கி தோற்றுவித்த ஈஷா பவுண்டேஷன், ஈஷா பிசினஸ் பி லிட்., ஈஷா இன்ஸ்டிடியூட் ஆப் இன்னர் சயின்ஸ் (மோடி படித்து பட்டம் வாங்கிய எண்டையர் பொலிட்டிக்கல் சயின்ஸ் போன்று) மற்றும் ஈஷா எஜுக்கேஷன் , திரிசூல் பவுண்டேசன், ஈஷா கேப்பிடல் பி லிட்., ஆகிய அமைப்புகளின் டைரக்டராக இருப்பவர் தான் ஜக்கியின் உயிர்த் தோழியான இந்த பாரதி.
இவரும் ஜக்கி வாசுதேவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பற்றி கூறும் இந்த காணொலி, பாரதி வெட்டவெளியில் படுத்திருக்க அவரது பிறப்பு உறுப்பின் மீது ஜக்கி காலை வைத்து அழுத்தும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் . இது ஒரு ஆன்மீகச்செயல் என ஜக்கி குறிப்பிடுவதாகவும் கூறும் ஷியாம் மீரா சிங், பாரதி வரதராஜ் மற்றும் ஜக்கி வாசுதேவின் உடல் ரீதியான நெருக்கத்தை இப்படம் காட்டுகிறது என்று கூறுகிறார்.
இது தவிர, பாரதி வரதராஜூம் மற்றொரு பெண்மணியான மா பிரதியுத்தா, ஆகிய இருவருக்குமிடையிலான மின்அஞ்சல் பரிமாற்றங்களையும், மா பிரதியுத்தா ஜக்கி வாசுதேவிற்கு அனுப்பிய மின்னஞ்சலையும் இங்கு வெளியிட்டுள்ளார்.
பதினைந்து வயது நிரம்பாத சிறுமிகளுக்கு பிரம்மச்சரியத்தை துவக்கி வைத்தல் என்ற பெயரில் அதிகாலை மூன்று மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி 60 நாட்கள் மிகக் குளிர்ந்த நீர் கொண்ட தீர்த்தகுளத்தில் குளிக்க வைப்பது தவிர்க்க வேண்டும். இதனால், அவர்களால் ஆசனங்களில் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் தூங்கி வழிகின்றனர், இதற்கு பதிலாக அதிகாலை நான்கரை மணிக்கு எழுப்பி குளிக்க வைக்கலாம்.
பிம்மச்சாரிய தீட்சை பெறுவதற்காக யோகா அசிரியர் முன்பாக மேலாடை ஏதுமின்றி இந்த சிறுமிகள் யோகாசனம் செய்யவும், சூரிய நமஸ்காரம் செய்யவும் வற்புறுத்தப்பட்டனர் என்றும், இதனால்
இச்சிறுமியர் மிகவும் மன வேதனை அடைகின்றனர். இந்த இரு நடைமுறைகளையும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் செய்கிறோம், நாளைக்கு இது வெளியில் தெரிந்தால் சிக்கலாகி விடும்.
எனவே, இவ்விரு பழக்கங்களையும் நாம் கைவிட வேண்டும் என தீர்மானித்து அதற்கான ஒப்புதலை கேட்டு ஜக்கி வாசுதேவிற்கு மின்னஞ்சலை மா பிரதியுத்தா அனுப்புகிறார். அதற்கு பதிலாக “ இரண்டிற்கும் ஆமாம்’’ ( Yes for Both) என ஜக்கி பதில் அனுப்பியதும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
”இந்த மின்னஞ்சல்கள் போலியானவை’’ என ஈஷா மையம் அறிவித்து சமாளித்துள்ளது, இத்தகைய போலி மின்னஞ்சல்களை வெளியிட்டால் நடவடிக்கை பாயும்’’ என மிரட்டலும் விடப்பட்டுள்ள சூழலில், இந்த காணொலியை ஆராய்ந்து, காவல்துறை இதன் உண்மைத் தன்மையை விசாரித்து வெளிக்கொணர பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் செய்யாத வியக்கத்தக்க இந்த முயற்சியில் மற்றொரு விடயத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
மிக வசதியான அமெரிக்க வாழ் தம்பதியர் தங்களது எட்டு வயது பெண்ணை ஈஷா கல்வி மையம் கோவையில் சேர்த்துவிட்டனர். எட்டு வயதே நிரம்பிய அந்த சிறுமிக்கு ஆஸ்த்துமா பிரச்சினை இருந்தது. ஆனால், அந்த குழந்தையை துன்புறுத்தும் நோக்கத்தில் உடற்பயிற்சி ஆசிரியர் அதிகாலை நீண்ட நேரம் ஓடவைத்து மயங்கி விழும் நிலையை ஏற்படுத்துவார். மயங்கி விழுந்த அந்த சிறுமியை தனியிடம் தூக்கிச் சென்று வன்புணர்வு கொடுமை நிகழ்த்தி உள்ளார்.
பலமுறை இது போல பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஒரு வழியாக அமெரிக்காவிற்கே திரும்பிவிட்டார். இதை தன் அத்தையிடம் சொல்லி, பிறகு அம்மாவிடமும் கூறியுள்ளார். 2008 ல் நடந்த இந்த நிகழ்வின் கசப்பு உணர்வில் இருந்து இன்று வரை தன்னால் மீள முடியவில்லை அந்த பெண்ணுக்கு. இவளது பெற்றோர்கள் ஜக்கி வாசுதேவுக்கு விலை உயர்ந்த சர்வதேச தரமுள்ள நான்கு பைக்குகளும், நிறைய பணமும் தந்தவர்கள். ஆகவே அவர்கள் ஜக்கி அவர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் ஆழ்ந்த வருத்ததை தெரியப்படுத்தியதற்கு ஜக்கியிடம் இருந்து பதிலே இல்லை.
மாறாக, மீண்டும் யோகா மையத்திற்கு வந்தால் எல்லாம் சரியாகும் என அழைக்கப்பட்டாள். இதற்குள் சற்று பெரியவளாக வளர்ந்துவிட்ட அந்தப் பெண் 2023ல் இந்த முறை ஜக்கியிடம் அப்பாயிண்மெண்ட் பெற்று தனக்கு நடந்த அநீதிகளை கூறி அழுதுள்ளார். அப்போது எல்லாவற்றையும் என் காலடியில் போட்டுவிட்டு நிம்மதியாக போய்விடு என்றாரே, தவிர சம்பந்தப்பட்டவரை அழைத்து கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் இது தொடர்பாக கோவை காவல் நிலையத்தில் துணிந்து புகார் தந்தார். ஆனால்,காவல்துறை முதல் குற்ற அறிக்கை கூட பதியவில்லை.
இதே போன்று யாமினி – ஈஷா ஹோம் ஸ்கூல் ஆசிரியை– தனது மகனுக்கு அந்த பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றியும், வன்கொடுமை செய்த மற்றொரு மாணவனை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்யாத ஜக்கி வாசுதேவ் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இவை போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பள்ளியின் நிர்வாகம் தானும்விசாரித்து நடவடிக்கை எடுக்கவுமில்லை, காவல்துறைக்கும் புகாரும் அளிக்கவில்லை.
போக்சோ சட்டம் 2012 பிரிவு 19 ன்படி குற்றம் நடந்து விட்டதை அறிந்த ஒருவரோ- சம்பந்தப்பட்ட நிறுவனமோ அதை காவல் நிலையத்திற்கு தெரிவிக்காமலிருப்பது கிரிமினல் குற்றமாகும்.
யாமினியும் அவரது கணவரும் கூட மேலே கூறிய மின்னஞ்சல்கள் பற்றி – இளம் பெண்களை மேலாடை இன்றி பிரம்மசாரிய தீட்சை பெற வற்புறுத்துதல்,
60 நாட்கள் அதிகாலை 3 மணிக்கு எழுப்பி குளிக்க வைத்தல் போன்றவை குறித்த மா பிரதியுத்தா மற்றும் பாரதி வரதராஜின் மின்னஞ்சல்கள் அதற்கு ஜக்கியின் பதிலடங்கிய மின்னஞ்சல் குறித்து- பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Also read
அமெரிக்க சிறுமி பற்றியும் இந்த யாமினி பேட்டி அளித்துள்ளார் எனக் கூறும் ஷியாம் மீரா சிங் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகத்தை இதன் மூலம் மீண்டும் கிளறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளையே மதிக்காத அளவுக்கு மாபெரும் செல்வாக்கு படைத்த இந்த ஈஷா யோகா மைய ஜக்கி வாசுதேவை இயற்கையாக பார்த்து தண்டித்தால் தான் உண்டு!
பாலியல் கொடுமையை தண்டிக்காத அரசை, அதுவும் போக்சோ மற்றும் நிர்பயா சட்டங்கள் பல இயற்றப்பட்டும் இயங்காத அரசு நிர்வாகத்தை – மக்கள் தேர்தல் நேரத்தில் தண்டித்துவிடுவார்கள்! பெரியார் வழித் தோன்றலாக தங்களை பிரகடனப்படுத்தி வரும் தமிழக ஆட்சியாளர்கள் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிப்படுத்தி ஈஷா யோகா மையத்தில் நடக்கும் அட்டுழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ச. அருணாசலம்