ARTICLE AD BOX
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி பகுதியில் முதல் தனியார் தங்கச் சுரங்கம் விரைவில் செயல்பாட்டை தொடங்க இருக்கிறது. ஜியோமைசூர் மற்றும் டெக்கான் கோல்டுமைன்ஸ் லிமிடெட் நிறுவனம், தங்கத்தை வெட்டி எடுக்க உள்ளதாக தெரிகிறது. மாநில அரசின் கருத்து கேட்புக்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற 3 மாதங்களுக்குள் தங்கத்தை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்னூலில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் 1994ஆம் ஆண்டு கண்டறிந்தது. தொடர்ச்சியாக, ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. முதற்கட்ட ஆய்வுகளை முடிக்கவே பெரும் முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனவே, 2005ஆம் ஆண்டில் திறந்த உரிமக் கொள்கையுடன் சுரங்கத்தை குத்தகைக்குவிட இந்திய புவியியல் ஆய்வு மையம் முடிவு செய்தது.
இந்நிலையில்தான், டாக்டர் மொடலி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவைச் சேர்ந்த ஜியோமைசூர் சர்வீசஸ் நிறுவனம் 2013ஆம் ஆண்டு ஜோனகிரி மண்டலத்தில் தங்க ஆய்வுக்கான சோதனைகளை தொடங்க உரிமம் பெற்றது.
அனைத்து அனுமதிகளையும் பெற அந்நிறுவனத்திற்கு ஒரு தசாப்தம் ஆன நிலையில், 2021ஆம் ஆண்டு டெக்கான் கோல்டு மைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சோதனைகளை தொடங்கியது. இதற்காக ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கும், 750 ஏக்கர் நிலத்தை வாங்கியும் சோதனைகளை தொடங்கியது. இப்பகுதியில் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து சோதனை நடத்திய நிலையில், வணிக நடவடிக்கைகளுக்குச் செல்ல ஆய்வக அறிக்கைகள் சாதகமாக இருப்பதை கண்டறிந்துள்ளதாக ஜியோமைசூரின் நிர்வாக இயக்குநர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தங்கத்தை வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்பட்டால் நேரடியாக 300 பேருக்கும், மறைமுகமாக 3 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 டன் மண் அல்லது பாறைகளை வெட்டி எடுத்தால் 50 கிராம் தங்கம் கிடைக்கும் என்றும் ஆண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.