ARTICLE AD BOX
ஆதவ் அர்ஜூனா எடுக்கும் அரசியல் முடிவுகள் அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த்து. அவரின் அரசியல் செயல்பாடுகளை எங்கள் குடும்பத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று அவரது மனைவியும், லாட்டரி மார்ட்டின் மகளுமான டெய்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.கவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஆதவ் அர்ஜூனா, 2016-ம் ஆண்டு தி.மு.க தொடங்கி நமக்கு நாமே திட்டத்தில் முக்கிய பொறுப்பாளராக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க.வுக்கு அதரவாக தேர்தல் களத்தில் செயல்பட்ட இவர், கடந்த 2023-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.
இந்த கட்சியின், துணைப்பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட இவர், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் அமர்ந்துள்ளார். தற்போது த.வெ.க கட்சிக்காக ஆதவ் அர்ஜூன் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பாகி வருகிறது.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகள் டெய்சி மார்ட்டினை ஆதவ் அர்ஜூனா திருமணம் செய்துகொண்டார். பெரும் தொழில் அதிபர்களில் ஒருவராக இருக்கும் மார்ட்டின் கடந்த 2019-2024-ம் ஆண்டில், 1368 கோடிக்கு் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளதாகவும், இதில் திமுகவுக்கு 509 கோடியும், பா.ஜ.க.வுக்கு 100 கோடியும் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், மருமகன் ஆதவ் அர்ஜூனின் அரசியல் செயல்பாடுகள் காரணமாக தற்போது இருவருக்கும் இடையே, முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஆதவ் அர்ஜூன், த.வெ.கவில் இணைந்தபிறகு, இந்த முரண்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது மனைவி டெய்சி வெளியிட்டுள்ள அறிக்கை அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள பதிவில்,நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்முறை வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகளும் நிலைப்பாடுகளும் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன.
மேலும் இது எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. இந்த அறிவிப்பு, ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எங்கள் ஈடுபாடு குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் மற்றும் யூகங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இருவரும் தனித்துவமான வேலை வாழ்க்கையுடன் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம், ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் கருத்துக்களை மதிக்கிறோம். வேறுவிதமாக எந்தவொரு தவறான தகவல்களை கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
எங்கள் பரஸ்பர நலனுக்காக, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எங்கள் குடும்பத்தை ஒருவருக்கொருவர் தொழில்முறை மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.